சுல்தான்பூர்: ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கை விசாரிக்கும் நீதிபதி விடுமுறையில் சென்றதால் வழக்கு ஆக.23ம் தேதி விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தல் 2018ம் ஆண்டு நடந்த போது பெங்களூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பாரதிய ஜனதா கட்சி நேர்மையான மற்றும் தூய்மையான அரசியலை நம்புவதாகக் கூறுகிறது. ஆனால் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கட்சித் தலைவர் இருக்கிறார்’ என்று குறிப்பிட்டார்.
ராகுல் காந்தி இப்படி பேசிய போது அமித்ஷா பாஜ தலைவராக இருந்தார். குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தபோது 2005ம் ஆண்டு நடந்த போலி என்கவுண்டர் அவர் குற்றம் சாட்டப்பட்டார். பின்னர் அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதைத்தான் ராகுல்காந்தி குறிப்பிட்டு பேசினார். இதையடுத்து உபி மாநிலம் சுல்தான்பூர் பா.ஜ பிரமுகர் விஜய் மிஸ்ரா 2018 ஆக.4ம் தேதி ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கு சுல்தான்பூர் எம்பி, எம்எல்ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுபம் வர்மா விசாரித்து வருகிறார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சிறப்பு நீதிபதி விடுமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வரும் 23ல் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.