சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மானாவாரி பயிராக ராகி பயிரிட்டுள்ளனர். தற்போது ராகி பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விளைநிலங்களில் புகுந்து ராகி பயிரை சேதப்படுத்தி வருகின்றன.
விவசாயிகள் தினமும் இரவு நேரத்தில் இடைவிடாமல் காவல் பணி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புட்டுராஜ்(49) என்பவரது விளை நிலத்தில் புகுந்து ராகி பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.
இரவு நேரத்தில் தொடர்ச்சியாக அப்பகுதியில் மழை பெய்ததால் யானைகள் நடமாட்டத்தை விவசாயிகள் கண்காணிக்க முடியவில்லை. நேற்று காலை விவசாயி புட்டுராஜ் தன்னுடைய விவசாயத் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது ராகி பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக ஜீரஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதம் அடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.