சேலம்: செல்போனில் தொடர்ந்து பேசி வந்த நிலையில், யாருடன் பேசுகிறாய்? என கேட்டு சந்தேகத்தில் மார்பில் உதைத்து தாயை கொன்ற கொடூர மகன்களை தந்தையுடன் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டூடையார்பாளையம் புதிய காலனியை சேர்ந்தவர் பொன்னுவேல்(45). இவரது மனைவி வசந்தி(38). இவர்களுக்கு 2 மகன்கள். ஒருவர் கவின்(20), மற்றொருவருக்கு 17 வயது ஆகிறது. பொன்னுவேலும், கவினும் கொத்துவேலைக்கு செல்வார்கள். 17 வயதான மகன், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் நடனமாடும் வேலை செய்து வந்தார். தாய் வசந்தி, கூலி வேலைக்கு செல்வார். இந்நிலையில் வசந்தி கடந்த 4 மாதமாக செல்போனில் யாருடனோ அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார். இதனால் ஏற்பட்ட சந்தேகத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
கடந்த 15ம்தேதி இளையமகன் தாயின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். நம்பர் பிசி என வந்ததால் கோபம் அடைந்த அவர், வீட்டிற்கு வந்து தாயின் செல்போனை எடுத்து, யாரிடம் பேசுகிறார் என கண்டுபிடிக்கும் வகையில் அதில் பதிவாகியிருந்த செல்போன் எண்ணை எடுத்தார். பிளஸ்2 வரை படித்துள்ள இவர், ஒரு செயலி மூலமாக குறிப்பிட்ட நம்பர் யார் பெயரில் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தார்.
அதில் ராஜா என்ற பெயர் வந்தது. அந்த ராஜா யார்? எனக் கேட்டு தந்தை மற்றும் அண்ணன், தம்பி இருவரும் வசந்தியை டார்ச்சர் செய்துள்ளனர்.நேற்று முன்தினம் காலையில் கணவர் பொன்னுவேல், மனைவியை ஆபாசமாக திட்டிவிட்டு, வெளியே சென்றார். தாய் யாருடன் பேசுகிறார் என்ற கோபத்தில் இருந்த கவின், யார் அந்த ராஜா? என கேட்டு சரமாரியாக தாக்குதல் நடத்தினார். 2வது மகன் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு அவரும் தாயை கடுமையாக தாக்கினார். ஆனால் வசந்தி, யார் அந்த ராஜா என்பதை தெரிவிக்கவில்லை.
ஒரு கட்டத்தில் அய்யோ என்னை விட்டுவிடுங்கள் என கதறியும் கொடூர எண்ணம் கொண்ட மகன்கள் விடுவதாக இல்லை. தாயின் மார்பில் எட்டி எட்டி உதைத்துள்ளனர். தலைமுடியை பிடித்து சுவரில் மோதி தாக்கியுள்ளனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக விட்டுவிட்டு தாக்குதல் நடத்தியதால் வசந்தி மயங்கி விழுந்தார். பின்னர் வசந்தியின் தங்கை சுகந்தியை செல்போனில் அழைத்து, அம்மாவை அடித்துவிட்டோம்.
மயங்கி விழுந்துவிட்டார், உடனடியாக புறப்பட்டு வா என அழைத்தனர். அவர் கணவர் ராமச்சந்திரனுடன் வேகமாக வந்தார். மயங்கி கிடந்த அக்காவை எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த அவரை டூவீலரில் ஏற்றி, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஏத்தாப்பூர் போலீசார் விரைந்து சென்று, சந்தேகத்தால் தாயை தாக்கி கொன்ற மகன்கள் இருவரையும், தூண்டிவிட்டு சென்ற கணவர் பொன்னுவேலையும் கைது செய்தனர். பின்னர் வசந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நேற்று பிரேத பரிசோதனை நடந்தது. இதில் மகன்கள் தாக்கியதில் இதயம் முழுவதும் ரத்தம் கசிந்திருந்தது தெரியவந்தது. இதனை பார்க்கும்போது தாயை சித்ரவதை செய்து கொன்றது தெரியவந்துள்ளதாக போலீசார் ெதரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை தங்கை சுகந்தியிடம் போலீசார் ஒப்படைத்தனர். செல்போனில் பேசியதற்காக தாயை பெற்ற மகன்களே மார்பில் காலால் உதைத்து கொன்ற கொடூர சம்பவம் நெஞ்சை பதைபதைப்பதாக உள்ளது.