போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் கிலோ ₹2க்கு கூட முள்ளங்கியை வாங்க ஆளில்லாததால், வேறு வழியின்றி விவசாயிகள் முள்ளங்கியை அறுவடை செய்யாமல், டிராக்டர் மூலம் நிலத்தை உழுது முள்ளங்கியை உரமாக்கி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கத்திரி, முள்ளங்கி, வெண்டை, தக்காளி, அவரை, துவரை, புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அறுவடைக்கு பின் காய்கறிகளை சென்னை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, காரிமங்கலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்தது. கடந்த மாதம் காய்கறிகள் விலை பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் சிரமம் அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கன மழையால் நெல், நிலக்கடலை, எள், உளுந்து மற்றும் முள்ளங்கி ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த மழையால் முள்ளங்கி விளைச்சல் அதிகரித்து காணப்பட்டது. மேலும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் முள்ளங்கி விற்பனைக்கு வந்ததால், உழவர் சந்தைகள், வாரச்சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட்டில் விலை சரிந்தது. முள்ளங்கி கிலோ ₹2 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வியாபாரிகள் முள்ளங்கியை வாங்க முன்வராததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதனால் விவசாயிகள் முள்ளங்கியை கால்நடை மற்றும் உறவினர்களுக்கு இலசமாக வழங்கினர். ஆனாலும் முள்ளங்கி விற்பனை தேக்கம் அடைந்தது. இதையடுத்து முள்ளங்கியை டிராக்டர் மூலம் உழுது நிலத்திற்கு உரமாக்கி வருகின்றனர்.
இதுகுறித்து விசாயிகள் கூறுகையில், ‘முள்ளங்கியை பறித்து சுத்தம் செய்ய கிலோவிற்கு ₹2 செலவாகிறது. மேலும் விற்பனைக்கு அனுப்ப ₹3 என மொத்தம் 5 ரூபாய் செலவாகிறது. ஆனால் வியாபாரிகள் கிலோ ₹2க்கு வாங்க மறுத்து வருகிறார்கள். இதனால் நாங்கள் முள்ளங்கியை நிலங்களிலேயே அழித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முள்ளங்கி காரத்தன்மை என்பதால், இரண்டு மாதங்களுக்கு வேறு மாற்று விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளது’ என்றனர்.