ராதாபுரம்: செய்வினை வைத்ததால் விபத்தில் மகன் இறந்ததற்கு பழிக்குப் பழி வாங்க 3 வயது சிறுவனை கழுத்தை நெரித்துக் கொன்று வாஷிங் மிஷினில் உடலை மறைத்து வைத்தேன் என்று ராதாபுரம் அருகே நடந்த கொடூர கொலையில் கைதான பெண் தங்கம்மாள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே ஆத்துக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (28). தொழிலாளி. இவரது மனைவி ரம்யா (25). இவர்களது மூத்த குழந்தை சுஜித் (6), 2வது குழந்தை சஞ்சீவ் (3). சுஜித் அருகில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பும், சஞ்சீவ் அங்கன்வாடியிலும் படித்து வந்தனர். விக்னேஷ் குடும்பத்திற்கும், இவர்களது வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் வசிக்கும் இசக்கியம்மாள் குடும்பத்திற்கும் இடையே ஏற்கனவே சொத்து தகராறு இருந்ததால், இரு குடும்பத்தினரும் பேசிக் கொள்வதில்லை.
இரு குடும்பத்தினருக்கும் இடையே பொதுக் குழாயில் தண்ணீர் பிடிப்பது உள்ளிட்டவற்றிலும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சஞ்சீவை திடீரென்று காணவில்லை. அவனை அங்கன்வாடியில் விடுவதற்காக விக்னேசும், ரம்யாவும் தேடியுள்ளனர். அதிர்ச்சியடைந்த இருவரும் அக்கம்பக்கத்தில் தேடியும் சஞ்சீவ் கிடைக்காததால், ராதாபுரம் போலீசில் விக்னேஷ் புகார் செய்தார். அதன்பேரில் ராதாபுரம் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் தேடினர். தங்கம்மாளிடம் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரது வீட்டுக்குள் சென்று தேடினர். அப்போது அங்கிருந்த வாஷிங் மிஷினுக்குள் சாக்கு மூட்டைக்குள் கட்டப்பட்டு, சஞ்சீவின் உடல் மறைத்து வைக்கப்பட்டிருப்பது, தெரியவந்தது. இதையடுத்து தங்கம்மாளை பிடித்து ராதாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சஞ்சீவை கொன்று, உடலை வாஷிங் மிஷினில் மறைத்து வைத்ததை ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். போலீசில் அவர் அளித்த வாக்குமூலம்: கடந்த 2 மாதங்களுக்கு முன்பு என்னுடைய 23 வயது மகன் பைக் விபத்தில் இறந்தான். ரம்யா குடும்பத்தினர் செய்வினை வைத்ததால் தான் மகன் விபத்தில் இறந்து விட்டான் என்று நினைத்தேன். மேலும் அவர்கள் என்னிடம் துக்கமும் விசாரிக்கவில்லை. இதனால் அவர்கள் மீதான சந்தேகம் வலுத்தது. நான் மகனை இழந்து தவிப்பது போல், ரம்யாவும் மகனை இழந்து தவிக்க வேண்டும் என்று கருதியே சஞ்சீவை வீட்டிற்குள் அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொன்று, சாக்குப் பையில் கட்டி வாஷிங் மிஷினில் மறைத்து வைத்தேன்.
வீட்டுக்கு பின் புறம் ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில் சிறுவனின் உடலை புதைக்க நினைத்தேன். அதற்குள் போலீசார் என்னை பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தெரிவித்தனர்.