Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர்: நாய் கடித்தவுடன் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இரவு, பகலில் சாலைகளில், தெருக்களில் நடந்து செல்லவோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ முடியாத வகையில் மக்களிடம் அச்சம் நிலவுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்கள் தெருநாய்களால் மிகவும் பயந்துகொண்டே செல்கின்றனர். காலையில் வாக்கிங் செல்பவர்கள் முதல் இரவு தாமதமாக வீட்டிற்கு செல்பவர்கள் வரை தெருநாய் தொல்லையால் அவதிப்படுகின்றனர். சில தெருக்களில் நாய்கள் அதிகம் இருப்பதால் வேறு தெருவின் வழியாக செல்லும்நிலை உள்ளது. நள்ளிரவில் தெரு நாய்கள் கூட்டமாகக் கூடி சண்டையிட்டு கத்திக்கொண்டே உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதுமட்டுமன்றி நாளுக்கு நாள் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் நாய் கடித்து 3 மாதம் ஆகியும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதால் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே மக்கள் அனைவரும் நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்வது அவசியம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ரேபிஸ் ஒரு கொடிய வைரஸ் நோய். நாய்கள் கடிப்பதால் மட்டும் ரேபிஸ் வருவதில்லை. வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை, ஆடு, மாடு மற்றும் வீட்டு விலங்குகள் கடிப்பதாலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. நாய் கடித்தவுடன் அந்த காயத்தை குறைந்தது 15 நிமிடங்களுக்கு சோப்பு தண்ணீரால் கழுவ வேண்டும். மேலும் தடுப்பூசிகள் போட்டு கொள்வதன் மூலம் ரேபிஸ் நோயை 100 சதவீதம் வரவிடாமல் தடுத்து விடலாம்.

அனைத்து அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் நாய்கடியின் அவசியத்தை அறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை பெற்று, ரேபிஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும். சிலர் நாய் கடித்த உடன் நாட்டுவைத்தியம் பார்க்கிறார்கள். அதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது. ஒரு நபர் நாய் கடித்து 3 மாதம் ஆகியும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பதால் இறந்துவிட்டார். எனவே, நாய் கடியால் பாதிக்கப்படும் மக்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக் கொள்வது அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.