கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 3,65,100 மாட்டின கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் துவங்கியது.
பர்கூர் ஒன்றியம், சூலாமலை ஊராட்சி மேல்கொட்டாய் கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் 4வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவங்கியது. முகாமை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து கூறியதாவது:
கோமாரி நோய் கலப்பின மாடுகளை தாக்கி, கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரத்தை பாதிப்படைய செய்கிறது. பொதுவாக இரட்டை குளம்புகள் கொண்ட கால்நடை இனங்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றன. கோமாரி நோய் தாக்குதலால் கறவை மாடுகளில் பால் உற்பத்தி, எருதுகளின் வேலை செய்யும் திறன் குறைகிறது. கறவை மாடுகள் சினை பிடிப்பது தடைபடுகிறது. இளம் கன்றுகளில் இறப்பு ஏற்படுகிறது. இந்நோய் பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு மிகவும் அதிகம். கோமாரி நோய் பாதித்த மாடுகளில் இருந்து, மற்ற மாடுகளுக்கு நேரடியாக தொற்றும் தன்மை கொண்டது.
இந்த நச்சுயிரி மாட்டுக்கொட்டகையில் சுமார் 15 நாட்கள் உயிருடன் இருக்கும். பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் அதிகமான கால்நடைகளுக்கு பரவுகிறது. இந்நோயை தடுக்க, அறிகுறிகள் ஏற்பட்டவுடன் கால்நடை மருத்துவ அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நோய் பாதித்த கால்நடைகளை உடனடியாக அகற்றி, தனியாக வேறு இடத்தில் பராமரிக்க வேண்டும். நோய் பாதித்த கால்நடைகளின் கொட்டகையை, கிருமி நாசினியான 4 சதம் சோடியம் கார்பனேட் (1 வாளி தண்ணீரில் ஒரு கைப்பிடி சலவைச் சோடா) கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். சுண்ணாம்பு தூளை மாட்டுக்கொட்டகையைச் சுற்றி தூவ வேண்டும். வருடத்திற்கு இரண்டு முறை தடுப்பூசி போட வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 3,65,100 மாட்டின கால்நடைகளுக்கு, தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ், 4வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று(நேற்று) துவங்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வரும் 26ம் தேதி வரை 21 நாட்கள் நடைபெறவுள்ளது. இம்முகாமில் அனைத்து கால்நடைகளுக்கும் (மாட்டினம்) கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும். எனவே, கால்நடை வளர்ப்போர் கோமாரி நோய் தடுப்பூசியை தங்கள் கால்நடைகளுக்கு போட்டு கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். தொடர்ந்து, சிறந்த முறையில் கறவை பசுக்களை பராமரித்த 3 பயனாளிகள் மற்றும் கன்றுகளை பராமரித்த 3 பயனாளிகள் என 6 பேருக்கு, தாது உப்புக்கலவை மற்றும் பரிசுகளை கலெக்டர் சரயு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ராஜேந்திரன், ஆவின் பொது மேலாளர் டாக்டர் சுந்தரவடிவேலு, ஆவின் துணை பொதுமேலாளர் டாக்டர் நாகராஜ், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் மரியசுந்தர், அருள்ராஜ், மருத்துவர்கள் சரவணகுமார், சிவசங்கர், ரோஜா, புவனேஸ்வரி, தாசில்தார் மகேஸ்வரி, பிடிஓ செந்தில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முனிரத்தினம் மற்றும் கால்நடை விவசாயிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.