ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி சம்பை மற்றும் உப்பூர் பகுதியில் கொளுத்தும் கோடை வெயிலால் உப்பு உற்பத்தி அமோகமாக நடைபெற்று வருகிறது. பாத்திகளில் விளைந்துள்ள உப்புகளை சேகரிப்பு செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்பாலைக்குடி சம்பை, உப்பூர் பகுதிகளில் உள்ள உப்பளங்களில் உப்பு விளைச்சல் கோடை வெயிலால் அமோகமாக நடைபெறுகிறது. பாத்திகளில் விளைந்த உப்புக்களை உப்பளத் தொழிலாளர்கள் தீவிரமாக சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளைவிக்கக் கூடிய உப்பு பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.
குறிப்பாக மீன் பதப்படுத்துதல் போன்றவற்றிற்கு அதிகமாக வாங்குகின்றனர். கடந்த ஆண்டு விவசாயம் பொய்த்துப் போய்விட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாய கூலித் தொழிலாளர்கள் உப்பு சேகரிப்பு பணியில் சேர்ந்து வருவாயை ஈட்டி வருகின்றனர்.
உப்பள உரிமையாளர்களுக்கு உப்பு விளைச்சல் அதிகம் இருந்தும், உரிய விலை கிடைக்கவில்லை என புலம்புகின்றனர். இருந்த போதிலும் ஏதோ இத்தொழில் மூலமாக 10 பேருக்கு வேலை கொடுக்கின்றோம் என்ற மனத்திருப்தி தானே தவிர, தற்சமயம் உள்ள விலைவாசியால் பெரிதாக லாபம் ஒன்றும் இல்லை என்றனர். உப்பளங்களில் விளையக்கூடிய உப்புகளை அரசே நல்ல விலை கொடுத்து கொள்முதல் செய்தால் பயனடைவோம் என உப்பள உரிமையாளர்கள் கூறுகின்றனர்.