Thursday, March 27, 2025
Home » ஏன்? எதற்கு? எப்படி?

ஏன்? எதற்கு? எப்படி?

by Porselvi

?வைணவ ஆலயங்களில் துளசி இலையும், தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப் படுவது ஏன்?
– பி.கனகராஜ், மதுரை.

வைணவ ஆலயங்களில் தரப்படும் தீர்த்தம் ஆனது, பஞ்ச பாத்திரங்கள் அதாவது ஐந்து பாத்திரங்களில் தனித் தனியாக வைத்து இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்து பெறப்பட்ட நீரின் கலவை ஆகும். லவங்கம், ஏலக்காய், பச்சைகற்பூரம் போன்ற வாசனாதி திரவியங்கள் அதில் கலக்கப்பட்டிருக்கும். இதனை பருகுவதன் மூலம் பஞ்சேந்திரியங்களையும் கட்டுப்படுத்தும் திறன் கிடைக்கும். அதே போல, துளசி எனும் தாவரம் பகவான் கிருஷ்ணனுக்குப் பிரியமானது. நவகிரஹங்களில் புதன் எனும் கோளின் தாக்கத்தினைப் பெற்றது. நரம்பியல் பிரச்னைகளில் இருந்து நம்மைக் காக்க வல்லது. இந்த பிரசாதங்களின் மூலமாக நமது உடலும் உள்ளமும் காக்கப்படுகிறது என்பதே அதற்கான தாத்பரியம் ஆகும்.

?அன்னதானம் செய்வதாக இருந்தால் நாம்தான் பக்தர்களுக்கு வழங்க வேண்டுமா?
– வண்ணை கணேசன், சென்னை.

எந்த ஒரு தானமாக இருந்தாலும் அதனைச் செய்பவர்கள் தாங்கள்தான் நேரடியாக சங்கல்பம் செய்துகொண்டு அதனை தங்கள் கரங்களால் செய்ய வேண்டும். அன்னதானம் என்று வரும்போது அது எந்த அளவில் இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். கொஞ்சமாக ஒரு கிலோ தயிர்சாதம் மட்டும் செய்து அதனை தானமாக வழங்குவதும் அன்னதானம்தான், இலைபோட்டு விருந்து வைப்பதும் அன்னதானம்தான். அதனை எத்தனை பேருக்குச் செய்கிறோம் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு ஆயிரம் பேருக்கு இலைபோட்டு பரிமாறி அன்னதானம் செய்கிறோம் என்று வைத்துக் கொண்டால், அதனை உடல்ரீதியாக ஒருவரால் மட்டுமே செய்ய இயலாது அல்லவா, அதற்குரிய பணத்தினை எவர் ஒருவர் செலவழிக்கிறாரோ அவருக்கு அந்த தானத்தினைச் செய்த பலன் ஆனது வந்து சேர்ந்துவிடும். உதாரணத்திற்கு, ஆலயத்தில் தினந்தோறும் செய்யப்படுகின்ற அன்னதான திட்டத்திற்கு நாம் பணத்தைச் செலுத்திவிட்டு அந்த நாளில் ஆலயத்திற்குச் சென்று சங்கல்பத்துடன் இறைவழிபாட்டினை செய்துவிட்டு அன்னதானத்தைத் துவக்கும் விதமாக எவரேனும் ஒருவருக்கு பரிமாறினால் போதும், மற்றவர்களுக்கு அங்கே பணியாற்றும் சிப்பந்திகள் பரிமாறினாலும் அந்த அன்னதானத்தைச் செய்த பலன் என்பது நமக்கு வந்து சேர்ந்துவிடும். அன்னத்தின் அளவு கொஞ்சமாக இருக்கும்போது நாமே அதனை நேடியாகச் செய்ய வேண்டும்.

?வாசலில் உடைப்பதற்கும் வீட்டின் முன் தொங்கவிடுவதற்கும் பூசணிக்காயை பயன்படுத்துவதன் தாத்பரியம் என்ன?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.

இதற்கு கூஷ்மாண்டன் எனும் அரக்கனின் கதையை ஆதாரமாகச் சொல்கிறார்கள். கூஷ்மாண்டன் எனும் அரக்கன், நரகாசுரனைப் போல, தான் இறக்கும் தருவாயில் இறைவனிடத்தில் ஒரு வரத்தினைப் பெற்றுக் கொண்டானாம். அதாவது, பூசணிக்காயில் தனது அம்சம் இருக்க வேண்டும் என்றும், தன்னை யார் ஒருவர் சுற்றி உடைக்கிறார்களோ அவர்கள் இல்லத்தில் இருக்கும் திருஷ்டி தோஷங்கள் அனைத்தும் விலகிவிட வேண்டும் என்று வரம் பெற்றுக் கொண்டதாகச் சொல்வார்கள். அதனால்தான் பூசணிக்காயை கூஷ்மாண்டம் என்ற பெயரில் அழைப்பார்கள். எதிர்மறையான எண்ணங்கள் நிறைந்த அந்த திருஷ்டி தோஷத்தினை ஈர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக புதிதாக கட்டப்படும் வீட்டில் அதனைக் கட்டி தொங்க விடுகிறார்கள். 15 நாட்களுக்கு ஒருமுறை அதனை சுற்றி உடைத்துவிட்டு மீண்டும் ஒரு புதிய காயைக் கட்டிவிடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் திருஷ்டி தோஷம் நீங்கும் என நம்பப்படுகிறது.

?பெற்ற மகள் கருவுற்றிருக்கும் காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாமா?
– எஸ்.லட்சுமி, திருநெல்வேலி.

கண்டிப்பாகச் செய்ய வேண்டும். முன்னோர் வழிபாடு செய்வதற்கும் பெற்ற மகள் கருவுற்றிருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மகள்தான் என்றில்லை, வீட்டில் மருமகள் கருவுற்றிருந்தாலும் முன்னோர் வழிபாட்டினை அவசியம் மேற்கொள்ள வேண்டும். அவ்வளவு ஏன், தனது மனைவியே கருவுற்றிருந்தாலும் தகப்பனார் இல்லாத நிலையில் மகன் ஆனவன் கண்டிப்பாக பித்ருக்களுக்கு தர்ப்பணத்தைச் செய்ய வேண்டும். பிள்ளையை பிரசவித்திருக்கும் நேரத்தில் அந்த பிரசவகால தீட்டு முடியும் வரை மட்டுமே விதிவிலக்கு என்பது உண்டு. மற்ற நேரத்தில் கண்டிப்பாக முன்னோர் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும்.

?புத்தர் ஞானம் பெற்ற போதிமரம் என்பது எது?
– மல்லிகா அன்பழகன், சென்னை.

ஆலமரத்தைத்தான் போதிமரம் என்று அழைக்கிறார்கள். வடமொழியில் இதனை ‘வடவிருக்ஷம்’ என்று அழைப்பார்கள். இந்து மதத்தில்கூட ஞான தட்சிணாமூர்த்தி ஸ்வாமி ஆலமரத்தின் கீழ் சின்முத்திரையுடன் தியானத்தில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு மௌனமாக போதிப்பது போன்று சித்தரித்திருப்பார்கள். இறைவன் ஞானத்தை போதிக்கும் இடம். ஆதலால் அந்த மரத்திற்கு போதிமரம் என்ற பெயர் வந்து சேர்ந்தது. ஆலமரம் அமைந்திருக்கும் இடம் என்பது ஞானத்தைத் தருகின்ற பகுதியாக பார்க்கப்படுகிறது.

?ஆண்களுக்குச் சொல்லும் ஜோதிட கணிப்பு என்பது பெண்களுக்குப் பொருந்துமா?
– வசந்தி நாகராஜன், குமரி.

பொருந்தும். கல்வி, சொந்த வீடு, வண்டி வாகனம், வாழ்க்கைத்துணை, உத்யோகம் போன்ற பெரும்பான்மையான பலன்கள் இருவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு, நான்காம் பாவகம் என்பது கல்வியைப் பற்றிச் சொல்லும், பத்தாம் பாவகம் என்பது உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் என்ற விதிகளின்படி ஆண், பெண் இருவருக்கும் அந்த விதி என்பது பொருந்தும். மாங்கல்ய பலம் என்று வரும்போது எட்டாம் பாவகம் என்பது முக்கியத்துவம் பெறும். எட்டாம் பாவகம் என்பது பெண்களுக்கு மாங்கல்ய பலத்தைத் தருவதாகவும், அதே எட்டாம் பாவகம் என்பது ஆண்களைப் பொறுத்தவரை அது அவர்களின் ஆயுள் ஸ்தானம் ஆகவும் பார்க்கப்படுகிறது. பெண்களின் ஆயுளை அவர்களது லக்ன பாவகம் என்பது தீர்மானிக்கும். அதே போல, ஆண்களைப் பொறுத்த வரை புத்ர ஸ்தானம் என்பது ஐந்தாம் வீடாகவும் பெண்களைப் பொறுத்தவரை ஒன்பதாம் பாவகம் என்பது பிள்ளைப்பேற்றினைத் தரும் என்றும் சொல்வார்கள். ஒரு சில வித்தியாசங்களைத் தவிர பெரும்பாலும் ஆண், பெண் இருவருக்கும் ஜோதிட கணிப்பு என்பது ஒன்றாகவே இருக்கும்.

You may also like

Leave a Comment

16 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi