லண்டன்: குவீன்ஸ் கிளப் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். பிரிட்டன் தலைநகர் லண்டனில் குவீன்ஸ் கிளப் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிப் போட்டியில் சக ஸ்பெயின் வீரர் ராபர்டோ பாடிஸ்டா அகுட்டை வீழ்த்தி, உலகின் 2ம் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் பிரிட்டன் வீரர் ஜாக் அலெக்சாண்டர் டிரேப்பரை வீழ்த்தி, செக் வீரர் ஜிரி லெஹெக்கா இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், அல்காரஸ், லெஹெக்கா இடையிலான இறுதிப் போட்டி, நேற்று முன்தினம் இரவு நடந்தது. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் அல்காரஸ் வசப்படுத்தினார். 2வது செட் கடும் இழுபறியாக இருந்ததால் டைபிரேக்கர் வரை சென்றது. அந்த செட்டை, 7-6 (7-5) என்ற புள்ளிக் கணக்கில் லெஹெக்கா வசப்படுத்தினார். அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் சாமர்த்தியமாக ஆடிய அல்காரஸ், 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இந்த பட்டத்தை 2வது முறையாக அல்காரஸ் கைப்பற்றி
உள்ளார்.