லண்டன்: குவீன்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில், ஜெர்மன் வீராங்கனை டாட்ஜனா மரியா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். லண்டனில், குவீன்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஜெர்மன் வீராங்கனை டாட்ஜனா மரியா (37), அமெரிக்காவை சேர்ந்த உலகின் 15ம் நிலை வீராங்கனை அமண்டா அனிசிமோவா (23) உடன் மோதினார்.
37 வயது ஆனபோதும் துடிப்புடனும் நேர்த்தியாகவும் ஆடிய மரியா, முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும், சிறப்பாக ஆடிய மரியா, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்ற மரியா, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம், டபிள்யுடிஏ 500 ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை மிக அதிக வயதில் வென்ற வீராங்கனை என்ற சாதனையை மரியா படைத்துள்ளார்.