பெங்களூரு: சட்டவிரோத குவாரி முறைகேடு வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி உட்பட 4 பேருக்கு தெலங்கானா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த மே மாதம் 6ம் தேதி தீர்ப்பளித்தது. அதை தொடர்ந்து 4 பேரும் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையில் சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தண்டனை ரத்து செய்யக்கோரி ஜனார்த்தனரெட்டி உள்பட நான்கு பேரும் தெலங்கானா மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அம்மனுவை விசாரணை நடத்திய நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பில், குவாரி முறைகேடு புகாரில் ஜனார்த்தனரெட்டி உள்பட 4 பேரை குற்றவாளிகள் என்று சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தண்டனை உத்தரவுக்கு மட்டும் தடை விதித்து உத்தரவிட்டது.
மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடரும் என்றும் உத்தரவிட்டது. மேலும் சிபிஐ நீதிமன்றம் வழங்கிய 7 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதித்துள்ளதால், குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது. சிபிஐ நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால், ஜனார்த்தன ரெட்டியின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தெலங்கானா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், ரெட்டி மீண்டும் கங்காவதி சட்டப்பேரவை உறுப்பினராக தொடருவார் என்று தெரியவருகிறது.