சென்னை: சென்னை தரமணியில் உள்ள ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்காவில் ‘குவாண்டம் மிஷன்’ குறித்த சர்வதேச கருத்தரங்கம் 3 நாள் நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், தேசிய குவாண்டம் மிஷன் தலைவர் அஜய் சௌத்திரி, சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி ஆகியோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கு தொடக்க நிகழ்வுக்கு பிறகு, சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி அளித்த பேட்டி: அடுத்த தலைமுறை கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சிதான் குவாண்டம் கம்ப்யூட்டிங் முயற்சி. சர்வதேச அளவில் குவாண்டம் கம்ப்யூட்டிங் தயாரிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. தற்போது நாம் பயன்படுத்தும் கிளாசிக் வகை கப்யூட்டர்கள் 0,1 என்ற பைனரி எண்களை கட்டளையாக கொண்டு செயல்படுகிறது. கிளாசிக் வகை கம்ப்யூட்டர்களை விட வேகமாக செயல்படும் ஆற்றல் கொண்டதாக குவாண்டம் கம்ப்யூட்டிங் இருக்கும்.
0,1 பைனரி எண்களுக்கு இடைப்பட்ட கட்டளைகளை குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆல் ஏற்க முடியும். தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு குவாண்டம் கம்ப்யூட்டரை மையமாக வைத்து எதிர்காலத்தில் செயல்படும். குவாண்டம் கம்ப்யூட்டிங் தொழில்நுட்ப வளர்ச்சி ஓரளவிற்கு பயன்பாட்டிற்கு வர இன்னும் 5 ஆண்டுகள் வரை ஆகலாம். இதற்கான ஹார்டுவேர் பொருள்கள் தயாரிப்பது மிகவும் சவாலாக உள்ளது. தற்போது நாம் சென்சிங் மெக்கானிசத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். அதற்கு குவாண்டம் கம்ப்யூட்டிங் முறை அடித்தளமாக அமையும்.
கிளாசிக் கம்ப்யூட்டர்கள் மூலமாக வங்கி பணப் பரிவர்த்தனைகளில் பாதுகாப்பு அம்சத்தை ஏற்படுத்துகிறோம். ஆனால் மற்றொரு கிளாசிக் கம்ப்யூட்டரை வைத்து அந்த பாதுகாப்பு அம்சத்தை உடைத்து விட முடியும். ஆனால் குவாண்டம் கம்ப்யூட்டிங் முறையில் பாதுகாப்பு அம்சத்தை ஏற்படுத்தினால் அதனை உடைப்பது கடினமாக இருக்கும். தொலைத் தொடர்பிலும், துல்லியமான முன்னறிவிப்பு இருக்கும் குவாண்டம் கம்ப்யூட்டிங் முறை முதற்கட்டமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குவாண்டம் கம்ப்யூட்டிங் டெக்னாலஜியை பயன்படுத்தி ஐஐடியில் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.