சிவகாசி: ஆடிப்பெருக்கையொட்டி சிவகாசியில் 2025க்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டது. கியூஆர் கோடை ஸ்கேன் செய்தால் தமிழக சட்டமன்ற தொகுதிகள் பற்றிய சிறப்புகளை அறியும் புதிய மாடல்களும் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 200க்கும் மேற்பட்ட அச்சகங்களில் காலண்டர் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. இத்தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
காலண்டர் தயாரிப்பு மூலம் சிவகாசியில் ஆண்டுக்கு ரூ.200 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. ஆடிப்பெருக்கையொட்டி 2025க்கான காலண்டர் ஆல்பம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. புதிய ஆண்டிற்கான காலண்டர் வடிவம், அளவு, தயாரிக்கப்பட்டுள்ள மெட்டீரியல், விலை விவரங்களை ஆல்பத்துடன் முகவர்களுக்கு காலண்டர் நிறுவனங்கள் வழங்கின. இந்த வாரத்திலிருந்து காலண்டர் ஆர்டர்கள் எடுக்கும் பணிகளை முகவர்கள் துவங்குவார்கள். செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 4 மாதங்களில் காலண்டர் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று, ஆர்டர் செய்தவர்களுக்கு அனுப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
புதிய வடிவம்: ஒவ்வொரு ஆண்டும் தினசரி காலண்டர்களில் புதுப்புது ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும். 2025 ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் மெகா சைஸ் ‘மரகத காலம்’ காலண்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 3 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட இந்த காலண்டரில் கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கியூஆர் கோடுடன் தினசரி காலண்டர் புது வடிவில் வருகிறது.
காலண்டர் தாளில் உள்ள கியூஆர் கோடை செல்போன் மூலம் ஸ்கேன் செய்தால் தமிழக சட்டமன்ற தொகுதிகள், சுற்றுலாத் தலங்கள், கோயில்கள், வரலாறு, தொகுதியில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தினசரி தாளிலும் ஒவ்வொரு சட்டசபை தொகுதி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 234 தொகுதிகளின் சிறப்பு அம்சங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் இந்த புதிய தினசரி காலண்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
* விலை உயர்வு:
காலண்டர் தயாரிப்பாளர் கற்பகா ஜெயசங்கர் கூறுகையில், ‘‘ஆடிப்பெருக்கில் ஆல்பம் வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு ஏராளமான மாடல்களில் காலண்டர் வெளியிடுகிறோம். ஆர்ட் பேப்பர் விலை உயர்வு மற்றும் மின் கட்டணம், கூலி உயர்வு காரணமாக காலண்டர் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசு காலண்டர் தொழிலுக்கு விதித்துள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும்’’ என்றார்.