தோஹா: கத்தார் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா அட்டகாச வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். கத்தார் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு கத்தாரின் தோஹா நகரில் நடந்தது. இதில் அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவும், பிரெஞ்ச் ஓபன் முன்னாள் சாம்பியன், லாத்வியா நாட்டின் ஜெலெனா ஒஸ்டபென்கோவும் மோதினர். போட்டியின் இடையே இரு முறை மழை குறுக்கிட்டது.
இரண்டாவது முறை மழை குறுக்கிட்டு விட்ட பின் அமண்டாவின் ஆட்டம் சூடுபிடிக்கத் துவங்கியது. மன உறுதியுடனும் மிகுந்த கவனத்துடனும் ஆடிய அவர், 6-4, 6-3 என இரு செட்களையும் கைப்பற்றி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதையடுத்து வெற்றிக் கோப்பை அவருக்கு பரிசளிக்கப்பட்டது. கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் 2002ம் ஆண்டு அமெரிக்காவின் மோனிகா செலஸ் வென்றார். அதன் பின் இந்த போட்டியில் வெற்றி பெறும் 2வது வீராங்கனையாக அமண்டா திகழ்கிறார். அவரது வாழ்நாளில் பெறும் 3வது பட்டம் இது.