ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே கரும்பு தோட்டத்தில் 8 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே ஜனகராஜ்குப்பம் கிராமத்தில் கரும்புத்தோட்டம் உள்ளது. கரும்புதோட்டத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். திடீரென பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நீண்ட நேரமாக தீயணைப்பு வீரர்கள் வராததால், தொழிலாளர்களே லாவகமாக பாம்பை பிடித்து கூண்டுக்குள் அடைத்தனர். இதையடுத்து 4 மணி நேரம் கழித்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்களிடம் 8 அடி நீள மலை பாம்பை ஒப்படைத்தனர். அவர்கள், திருத்தணியில் உள்ள வனத்துறையில் மலைபாம்பை ஒப்படைக்க எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.