ஊத்துக்கோட்டை: அவிச்சேரி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோயில் காம்பவுண்டு சுவரை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம், மேலக்கரமனூர் ஊராட்சியில் அவிச்சேரி கிராமத்தில் ஸ்ரீ பூவாத்தம்மன் கோயில் உள்ளது. இந்த அவிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், கிராம தேவதையான ஸ்ரீ பூவாத்தம்மனை வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலின் காம்பவுண்டு சுவர் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
அதன்பேரில் ஊத்துக்கோட்டை பொதுப்பணித்துறை அதிகாரிகள், பென்னலூர்பேட்டை போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம், ஸ்ரீ பூவாத்தம்மன் கோயில் காம்பவுண்டு சுவரை நேற்று இடித்தனர். இதனையறிந்த கிராம மக்கள், கோயிலின் காம்பவுண்டு சுவரை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்களை வைத்து பொக்லைன் இயந்திரம் மூலமாக கோயில் காம்பவுண்டு சுவரை இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.