கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கடந்த 27ம் தேதி திருக்கோவிலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட ஜி.அரியூர் கிராமத்தில் ஆய்வு பணிகளை முடித்துக்கொண்டு காரில் வரும் வழியில் மாற்றுத்திறனாளியான ராமதாஸ்(52) என்பவர் சாலை ஓரமாக இருந்தார். கலெக்டரின் காரை பார்த்ததும் தவழ்ந்து வந்து கலெக்டர் அய்யா என கூப்பிட்டார். உடனே காரை அதே பகுதியில் நிறுத்தி இறங்கி சென்ற கலெக்டர், அந்த மாற்றுத்திறனாளி அருகில் அமர்ந்து கோரிக்கையை கேட்டார். அப்போது தனக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கினால் உதவியாக இருக்கும் என்று ராமதாஸ் கண்ணீர் மல்க கேட்டார்.
அவரது கோரிக்கையை பரிசீலனை செய்த கலெக்டர், அடுத்த நிமிடமே மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கிட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணிக்கு உத்தரவிட்டார். அதன்படி கடந்த 31ம்தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ராமதாசை வரவழைத்து மூன்று சக்கர ஸ்கூட்டரை கலெக்டர் வழங்கினார். அப்போது ராமதாஸ் கூறுகையில் என்னால் நடந்து செல்ல முடியாத நிலையில் அவதிப்பட்டு வந்தேன். எனது கோரிக்கையை விரைந்து நிறைவேற்றி மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கிய கலெக்டருக்கு நன்றி என்றார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.