புழல்: சென்னை புழல் மத்திய சிறைச்சாலை அருகே புழல்-அம்பத்தூர் செல்லும் சாலையில் தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் இன்று காலை 2வது பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். பின்னர் தனது காருக்கு அங்கு பெட்ரோல் நிரப்பி பணத்தை வழங்கி பணிகளை துவக்கி வைத்தார். புழல் சிறை அருகே ஜிஎன்டி சாலையில் சிறைத்துறை ஊழியர் குடியிருப்பு அருகே ஏற்கெனவே முதல் பெட்ரோல் விற்பனை நிலையத்தை சிறைக் கைதிகள் நடத்தி வருகின்றனர்.
தற்போது புழல் சிறைத்துறை அதிகாரிகள் குடியிருப்பு அருகே, புழல்-அம்பத்தூர் சாலையில் 2வது பெட்ரோல் விற்பனை நிலையம் துவங்கப்பட்டு உள்ளது. இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பகல், இரவு என 2 ஷிப்ட்டுகளில் பெண் கைதிகள் வேலைபார்க்கின்றனர் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி பேசுகையில், தமிழக சிறைத்துறை சார்பில் துவங்கப்பட்ட 6வது பெட்ரோல் விற்பனை நிலையம் இது. இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் கைதிகளுக்காக உருவாக்கப்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையம் இது.
இங்கு நன்னடத்தை அடிப்படையில் பெண் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, பகலில் 30 பேரும், இரவில் 17 ஆண் கைதிகளும் பணியாற்றுவர். இதில் பெண் கைதிகளுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். இதேபோல் பல்வேறு சிறைச்சாலை வளாகங்களில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார். இதில் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி, சிறைத்துறை துணைத் தலைவர்கள் முருகேசன், கனகராஜ், சிறைக் கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணராஜ், நிகிலா நாகேந்திரன் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.