புழல்: சென்னை புழல், லட்சுமி அம்மன் கோயில் தெருவில் பழமை வாய்ந்த ஸ்ரீ ராதாகிரிதாரி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று முன்தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, காலை முதலே அகண்ட ஸ்ரீ நாம பாராயணமும், மாலை உற்சவர்களான ராதா – கிருஷ்ணர் விக்ரகங்களுக்கு அபிஷேகமும் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு ராதா – கிருஷ்ணர் விக்ரகங்களுக்கு பாலாபிஷேகம் செய்து, சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், ராதா – கிருஷ்ணர் மற்றும் கிருஷ்ணர் பலராமர் – சுபத்திரை ஆகிய விக்ரகங்களுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதனையடுத்து, ராதா – கிருஷ்ணர் வேடமடைந்த குழந்தைகளின் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. ராதா – கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகள் உறியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.