புழல்: செங்குன்றம் அருகே நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோலையம்மன் நகர், 2வது தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (40). இவர், அதே பகுதியில் பேன்சி கடை நடத்தி வந்துள்ளார். இவரது மகன் விஷ்ணு (10). அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், பம்மதுகுளம் கிராமத்தின் அருகில் உள்ள புழல் ஏரியில் தந்தை மணிவண்ணன், மகன் விஷ்ணு ஆகிய இருவரும் குளிக்க சென்றுள்ளனர். முதலில் ஏரிக்கரையின் ஓரமாக குளித்த தந்தை, மகன், சிறிது நேரத்தில் ஏரியின் நடுப்பகுதிக்கு சென்றுள்ளனர். இதனால் அங்கு நீருக்கு அடியே சேற்றில் இருவரும் சிக்கியுள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால், சிறிது நேரத்தில் புழல் ஏரிக்குள் மூழ்கி பரிதாபமாக பலியாகிவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் செங்குன்றம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். பின்னர், புழல் ஏரிக்குள் தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடியும் தந்தை, மகன் சடலங்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே இன்று அதிகாலை புழல் ஏரியில் இருவரின் சடலங்களும் கரை ஒதுங்கியது. அந்த 2 சடலங்களையும் போலீசார் கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.