சென்னை: புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்தபோது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் 4 அடைப்புகள் இருப்பதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். உயர்நீதிமன்ற அனுமதியோடு அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, கடந்தாண்டு ஜூலை மாதம் 17ம் தேதி புழல் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டு வந்தார். ஜாமீன் வழங்க கோரி தொடர்ந்து செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவினை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜி தரப்பு தொடர்ந்து முறையிட்டு வந்தது.
சிறையில் அடைக்கப்பட்டு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்த நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வாரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டு, 47வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் நேற்று மாலை 3.30 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக பரிசோதனைக்காக அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் இதயவியல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். அதன்பேரில் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு இதயவியல் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவுகிறது.