புழல்: புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த மப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கஜா என்ற கஜேந்திரன் (63). இவர் கடந்த 2007ம் ஆண்டு, சென்னை மறைமலைநகரில் நடந்த கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் சிறையில் இருந்த சில கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்தனர். அதில் தன்னையும் விடுக்கவில்லை என கஜேந்திரன் மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை கழிவறையில் உள்ள ஜன்னல் கம்பியில் துண்டால் தூக்கிட்டு கஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிறைத்துறை சார்பில், புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.