சென்னை: மாதவரத்திலிருந்து திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்த ஆந்திர அரசு பேருந்து புழல் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான தூய்மை பணி வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் புழல் பகுதியில் சாலையோரம் உள்ள மண் குவியலை அப்புறப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான லாரி ஒன்று ஈடுபட்டிருந்தது. அந்த நேரத்தில் சென்னை மாதவரத்தில் இருந்து ஆந்திரா நோக்கி திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த ஆந்திரா அரசு பேருந்து ஒன்று சாலையோரம் நின்றிருந்த மாநகராட்சிக்கு சொந்தமான லாரி மீது மோதியது இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் முழுவதுமாக நொறுங்கி பேருந்தின் முன்பக்கமே நசுங்கியது.
இந்த விபத்தில் பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர் மதுசூதனன் உட்பட 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் மதுசூதனன் மற்றும் பயணிகளை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்னை ஸ்டாண்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் உதவியோடு போக்குவரத்துக்கு போலீசார் சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர். சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தின் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.