Sunday, April 21, 2024
Home » புதல்வனை களம் இறக்க திட்டமிட்டு கூட்டணி பேரம் நடத்தும் பெண்மணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

புதல்வனை களம் இறக்க திட்டமிட்டு கூட்டணி பேரம் நடத்தும் பெண்மணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Karthik Yash

‘‘நான்கு பிரிவாக வாக்குகள் சிதறுவதால கடலோர மாவட்ட தொகுதியில போட்டிப்போடாம இலைக்கட்சி மாஜிக்கள் ஒதுங்குறாங்களாமே…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘திமுக கூட்டணியில் கடலோர மாவட்ட நாடாளுமன்ற தொகுதி, கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்டிருக்கு.. தற்போதைய எம்பியாக இருப்பவரே மீண்டும் போட்டியிடுவார்னு அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. அவரும் பிரசார பணிகளை துவங்கிட்டாரு.. பிரதான எதிர்க்கட்சியான இலைக்கட்சி தரப்பில் யாருடன் கூட்டணி என்பதே இன்னும் முடிவாகல.. ஆனால், எப்படியும் வேட்பாளர் நிறுத்தம் என்பதால் சேலத்துக்காரர் தரப்பு, முன்னாள் எம்பி, முன்னாள் அமைச்சர், மாவட்டச் செயலாளரின் மனைவி, முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறாங்க.. கட்சி 4 பிரிவுகளாக உள்ள நிலையில், வாக்குகள் சிதறுவதால் வெற்றி வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்த இலைக்கட்சியினர், ‘நாம ஒதுங்கிக் கொள்ளலாம். ஏதாவது ஒரு கூட்டணிக்கு தொகுதியை தள்ளிவிடலாம்’ என ஆலோசனையும் கூறியிருக்காங்களாம்.. இதற்கிடையே, தூங்கா நகரத்து மங்கலம் தொகுதியைச் சேர்ந்த சமுதாய அமைப்பைச் சேர்ந்தவரும், அந்த தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டவரும் தற்போது இங்கு போட்டியிட ஆசைப்பட்டு தூது அனுப்பியிருக்கிறாராம்.. பேசாமல் அவருக்கே ஒதுக்கிவிடலாம்னு இலை தரப்பும் முடிவு செஞ்சிருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பில் போடுறதுக்கு எக்ஸ்ட்ரா 3 பர்சன்டேஜ் கேட்குறாங்களாமே..’’
‘‘கிரிவலம் மாவட்டம் வந்தா… வாசி ஊராட்சி ஒன்றியத்துல இன்ஜினியரிங் செக்‌ஷன்ல பெயரின் முடிவுல ரன் கொண்டவர் பணிபுரிஞ்சுட்டு வர்றாரு. அந்த ஒன்றியத்துல என்ன பணிகள் நடக்குதோ எல்லாத்தையும் இவர்தான் பார்த்து ஆய்வு செஞ்சி கையெழுத்தை போடுவாராம்.. ஆனா, அவ்வளவு சீக்கிரத்துல எல்லாத்துலயும் கை எழுத்த போடுறதில்லையாம்.. மூன்று பர்சன்டேஜ் சம்திங் இல்லாம வேலையே நடக்குறதில்லையாம்..வழக்கமாக வாங்குற 3 பர்சன்டேஜ்ஜ விட, எக்ஸ்ட்ரா 3 பர்சன்டேஜ் கேட்டு டார்ச்சர் வேற செய்றாராம்.. இதனால ஒப்பந்ததாரருங்க நொந்து நூலாகுறாங்களாம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை குரல் ஒலிக்க தொடங்கியிருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதல்வனின் வெற்றிக்காக கோயம்பேடு கட்சி பெண்மணி போராடுகிறாராமே…’’
‘‘கோயம்பேடு கட்சியில், தனக்கு நன்கு அறிமுகமான தொகுதியில் புதல்வனை களம் இறக்க பெண்மணி திட்டமிட்டு கூட்டணி பேரம் நடத்தி வருகிறாராம்… கோயம்பேடு கட்சியில் கேப்டன் மறைவுக்கு பின் தலைமை எடுத்துள்ள பெண்மணி, வரவுள்ள மக்களவை தேர்தலில் தனது புதல்வனை எப்படியாவது எம்பி ஆக்கிடணும்ங்கிற கனவில் கூட்டணி பேரம் நடத்திக்கிட்டு வருகிறாராம்.. இதற்காக கடந்த மக்களவை தேர்தலில் தனது தம்பியை களம் இறக்கிய கல்லை தொகுதியில் புதல்வனை களம் இறக்க திட்டமிட்டிருக்கிறாராம்.. இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ரிஷிவந்தியத்தில் கேப்டன் எம்எல்ஏவாக வெற்றிபெற்று பதவி வகித்தார். மேலும் பெண்மணிக்கு நன்கு அறிமுகமான தொகுதி என்பதால் எப்படியாவது புதல்வனை களம் இறக்கி வெற்றி வாகை சூட திட்டமிட்டு இருக்கிறாராம்.. இலைக்கட்சியில் இரண்டு முறை நடந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளில், எத்தனை சீட்டு என்பது முக்கியமில்லை, ஒரு தொகுதி வெற்றி என்றாலும் தனது புதல்வனை வெற்றி பெற வைக்க வேண்டும்னு பெண்மணி கண்டிஷன் போட்டு இருக்கிறாராம்.. கூட்டணி பேர கண்டிஷனால் இலைக்கட்சி நிர்வாகிங்க இன்னும் தொகுதி பங்கீடு முடிவுக்கு கொண்டு வராமல் இருக்கிறார்களாம்.. கோயம்பேடு கட்சியின் பெண்மணி, தனது புதல்வன் அரசியலுக்காக மட்டும் போராடும் செயல், நிர்வாகிகள், தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேட்பாளரை முடிவு பண்ணிட்டுத்தான் நேர்காணலே நடத்தி முடிச்சிருக்காங்களாமே..’’
‘‘இலைக்கட்சியில எம்பி தேர்தலுக்கு போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் கடந்த 2 நாட்களாக நேர்காணலை கட்சியின் பொதுச்செயலாளர் நடத்தி முடிச்சுட்டாரு.. யாரு வேட்பாளருன்னு முடிவு பண்ணிட்டுதான் நேர்காணலே நடத்தினாங்களாம்.. அந்த வகையில மாங்கனி தொகுதியில போட்டியிட ‘ப’ வைட்டமின் அதிகம் வைத்துள்ள ஒருத்தரை வேட்பாளரா அறிவிக்க முடிவு பண்ணிட்டாங்களாம்.. வேட்பாளரோ தொகுதிக்கு ஆகும் செலவு முழுவதும் நானே பார்த்துக்கொள்கிறேன்னு தெரிவிச்சுட்டாராம்.. எல்லா செலவையும் வேட்பாளர் ஏற்றுக் கொள்ளவதால் இலைக்கட்சி விவிஐபி ஒரு கை பார்த்துறலாம்னு களம் இறங்கிட்டாராம்.. ஆனா கட்சியில மூத்த நிர்வாகிகள் பலர் இருக்கிறப்ப, ‘ப’ வைட்டமின் உள்ள ஒருத்தருக்கு சீட் கொடுப்பதான்னு அதிருப்தியில் சில நிர்வாகிகள் இருக்கிறாங்களாம்.. அவங்களை சரிக்கட்டும் வேலை ஒருபக்கம் வேற நடக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேட்பாளராக தனக்கு நம்பிக்கையானவரை நிறுத்தி மாஜிக்கு செக் வைக்க சேலத்துக்காரர் முடிவு பண்ணியிருக்கிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கடலோர மாவட்ட தொகுதியில் இலைக்கட்சி மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ தனக்கு வேண்டிய தொழிலதிபர் ஒருவரை வேட்பாளராக களத்தில் இறக்க முடிவு செய்திருந்தார். இதற்காக சேலத்துக்காரரை நேரில் சந்தித்து அந்த தொழிலதிபருக்கு சிபாரிசு செய்யலாம்னு இருந்து வந்துள்ளார். இந்த தகவல் தெரிய வந்த சேலத்துக்காரரின் டீம் அவரது கவனத்துக்கு உடனடியாக கொண்டு சென்றாங்களாம்.. மாஜி அமைச்சரின் சிபாரிசுக்கு இலைக்கட்சி தலைமை சீட் வழங்கினால், கடலோர மாவட்டத்தில் மீண்டும் தனது கை ஓங்கி விடும்னு அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் பேசிய தகவல் எப்படியோ வெளியில் கசிந்திருக்கு.. இது தெரிந்த சேலத்துக்காரர் டீம், உடனடியாக அவரது கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கு.. இதில் சுதாரித்துக்கொண்ட சேலத்துக்காரர், கடலோர மாவட்ட தொகுதியில் தனக்கு நம்பிக்கையானவரான டாக்டருக்கு தான் சீட் வழங்க முடிவு செய்துள்ளாராம்.. இதற்கான வேலைகள் திரைமறைவில் கச்சிதமாக நடக்கிறதாம்.. இதன் மூலம் மாஜிக்கு, மொத்தமாக செக் வைக்க சேலத்துக்காரர் முடிவு செய்துள்ளாராம்.. இந்த தகவல் தெரிய வந்ததும் ‘மணியானவர்’ கடும் அப்செட்டில் இருந்து வருகிறாராம்’’… என்று முடித்தார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

eight + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi