புதுச்சேரி : புதுச்சேரியில் நோ பேக் டே-யை முன்னிட்டு இன்று மாணவர்கள் புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வந்தனர்.புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் கடந்த 2020ம் ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கையின் அடிப்படையில், புதுச்சேரியில் நோ பேக் டே, அதாவது புத்தக பை இல்லா தினம், கடைபிடித்து தொடர்பாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாமில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த 27ம் தேதி கல்வித்துறை உத்தரவு ஒன்று பிறப்பித்தது. அதில் “மாதம் தோறும் கடைசி வேலை நாள் புத்தக பை இல்லா தினம் கடைபிடிக்க வேண்டும்.
அந்த நாளில் கைவினை, கலை, வினாடி – வினா, விளையாட்டு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.” என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஜூலை மாதத்தின் கடைசி வேலை நாளான இன்று புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் புத்தகப்பை இல்லா தினம் அமலுக்கு வந்தது. இதனால் மாணவர்கள் புத்தகமின்றி பள்ளிக்கு வந்தனர். இன்று முழுவதும் மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் செய்தல், கலைகள் மற்றும் விளையாட்டுகளை கற்று தருவது, வினாடி – வினா, கதை சொல்லுதல் கட்டுரை, விவாத நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.