திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் ரசிகர்களுக்கான ‘பிரிமியர் ஷோ’ சந்தியா என்ற தியேட்டரில் கடந்த வாரம் திரையிடப்பட்டது. அப்போது தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜூன் வந்தார். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் இறந்தார். காயமடைந்த அவரது மகன் தேஜா (9), மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் தியேட்டர் உரிமையாளர் மற்றும் நிர்வாகத்தினர் அலட்சியத்தால், நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கில், தியேட்டர் உரிமையாளர்களில் ஒருவரான சந்தீப், மேலாளர் நாகராஜ் மற்றும் செக்யூரிட்டி பொறுப்பாளர் விஜயசந்தர் ஆகியோரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


