சென்னை: பிரதமர் மோடியின் வேண்டுக்கோளுக்கு இணங்க சென்னையில் 500 இடங்களில் பாஜவினர் நேற்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். வாழும் காலத்தில் தூய்மையை வலியுறுத்திய காந்தியடிகளுக்கு, மக்கள் தூய்மையான அஞ்சலி செலுத்தும் முகமாக, “ஒருநாள், ஒரு மணிநேரம், ஒற்றுமையுடன்” கூடி பொது இடங்களில் சுத்தம் செய்வதன் மூலம் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டு கொண்டிருக்கிறார். அடுத்த நாள் தொடங்கும் காந்தி ஜெயந்தி மிகவும் வித்தியாசமாகவும், அற்புதமாகவும், தூய்மையானதாகவும், அமைய இந்த ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒன்றாக செய்யும் சேவை, பயனுள்ளதாக அமையும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடியின் வேண்டுக்கோளுக்கு இணங்க பாஜவினர் தமிழகம் முழுவதும் நேற்று தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜவினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பாஜ மாவட்ட தலைவர் கபிலன் தலைமையில் நடந்தது. இதில், மாநில செயலாளர் சதீஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். மேலும், இவர்கள் புளியந்தோப்பு, திருவிக நகர் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தெருக்களை சுத்தப்படுப்படுத்தும் பணியில் இறங்கினர். அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் பணியாற்றும் 50 தூய்மை பணியாளர்களுக்கு சட்டை, லுங்கி போன்ற நல உதவிகளை வழங்கினர். மடிப்பாக்கம் ஏரி, வில்லிவாக்கம் பூங்கா, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணியில் துணை தலைவர் கரு.நாகராஜன் கலந்து கொண்டார். இதே போல மற்ற பகுதிகளில் நடந்த தூய்மை பணியில் பாஜ மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* கடற்கரை தூய்மை பணியில் கவர்னர் பங்கேற்றார்
சென்னை அடுத்த உத்தண்டி நயினார்குப்பம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்றார். தமிழ்நாடு சட்டக் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், உத்தண்டி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 140 பேர் இப்பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் ஈடுபட்ட கவர்னர், பின்னர் அப்பகுதியில் உள்ள மச்ச அவதார பெருமாள் கோயிலில் தரிசனம் செய்தார். இதனையடுத்து தூய்மை பணியாளர்கள், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.