*அதிகாரிகள் மிரட்டுவதாக குற்றச்சாட்டு
தர்மபுரி : கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி, விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு பாலை தரையில் கொட்டி போராட்டம் செய்தனர்.தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு காரிமங்கலம் ஒன்றியம், பெரமாண்டபட்டி கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகள், பால் கேனுடன் வந்திருந்தனர். கலெக்டர் அலுவலக வாயிலில், கேனில் இருந்த சுமார் 20 லிட்டர் பாலை தரையில் கொட்டி போராட்டம் செய்தனர். இதையடுத்து, கலெக்டர் சாந்தியிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பெரமாண்டப்பட்டி கிராமத்தில், சுமார் 371 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் கடந்த 25 வருடமாக, அரசுக்கு சொந்தமான பெரமாண்டப்பட்டி பால் உற்பத்தியாளர் சங்க மையத்தில், பால் ஊற்றி வருகிறோம். இங்கு பணியில் உள்ள அலுவலர்கள், நாங்கள் ஊற்றும் பாலின் தரம், டிகிரி இருந்தும் சராசரியாக லிட்டருக்கு ரூ.7 ரூபாய் வீதம் குறைவாக, அதாவது ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.28 முதல் ரூ.30 வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.
அதே நேரத்தில், தனியார் பால் நிறுவனங்கள் ரூ.40 வரை பால் கொள்முதல் செய்கின்றனர். இதை தட்டிக்கேட்டால் பால் சொசைட்டி பணியாளர்கள், இனி பால் ஊற்ற வேண்டாம். எங்களது பால் தரமில்லை என மிரட்டுகிறார்கள். அதே போல், 10 நாட்களுக்கு ஒரு முறை பணமும் சரியாக தருவதில்லை. எனவே, முறைகேடு நபர்களை விடுவித்து, வேறு நபர்களை பணியில் அமர்த்தி, அரசு நிர்ணயித்த பால் கொள்முதல் விலையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.