Friday, December 1, 2023
Home » புரட்டாசியில் தரிசிக்க வேண்டிய வெங்கடாஜலபதி கோயில்கள்

புரட்டாசியில் தரிசிக்க வேண்டிய வெங்கடாஜலபதி கோயில்கள்

by Kalaivani Saravanan

திருமலை வையாவூர்

அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வான்வழியே வந்தபோது இத்தலத்தினால் கவரப்பட்டார். சஞ்சீவி மலையை சற்றே கீழே வைத்துவிட்டு கண் மூடி தியானத்தில் ஆழ்ந்தார். பிறகு அங்கிருந்து புறப்பட முற்பட்டபோது அனுமனால் சஞ்சீவி மலையை தூக்க முடியவில்லை. ஏதோ ஒரு சக்தி அவரை நகரவிடாது தடுத்தது. ‘ஐயனே நான் என்ன செய்ய?’ என்று நெஞ்சுருகி ராமனை பிரார்த்தித்தார். அங்கே புன்னகையுடன் வெங்கடேசப் பெருமாள் காட்சியளித்தார். இன்றும் நம் பொருட்டு அலர்மேல் மங்கையோடு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் எனும் திருநாமத்தோடு இறைவன் சேவை சாதிக்கிறார். இத்தலம் சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டு – மதுராந்தகம் இடையே ஜி.எஸ்.டி. சாலையின் உட்பகுதியில் படாளம் கூட்டு ரோடிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

கருங்குளம்

தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி கரையோரமுள்ள தென் திருப்பதிகளுள் ஒன்றாக கருங்குளம் வெங்கடாஜலபதி கோயில் விளங்குகிறது. மூலவர் வெங்கடாஜலபதி தனித்தன்மை வாய்ந்தவர். அழகனான பெருமாள் இங்கு உருவமற்றவராக சந்தனக் கட்டையில் அருவமாக அமர்ந்து ஆட்சி செய்கிறார். இத்தலத்தைப் பொறுத்தவரையில் மலையடிவாரத்திலுள்ள மார்த்தாண்டேஸ்வரரை வணங்கி விட்டுத்தான் வெங்கடாஜலபதியை வணங்குகின்றனர். திருநெல்வேலி-திருச்செந்தூர் பிரதான சாலையில் 15வது கிலோ மீட்டரில் கருங்குளம் அமைந்துள்ளது. நெல்லை டவுனிலிருந்து பஸ் வசதி உண்டு.

குணசீலம்

திருச்சிக்கு அருகே குணசீலம் எனும் தலத்தில் மூலவராகவே பிரசன்ன வெங்கடாஜலபதி அருள்கிறார். இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சந்நதி இல்லை. ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கோயில் இது. உற்சவரின் திருநாமம் ஸ்ரீநிவாசப் பெருமாள். பொதுவாக கோயில்களில் விழாவின்போது மட்டுமே கருட சேவை சாதிப்பார்கள். ஆனால், இங்கு ஒவ்வொரு திருவோண நட்சத்திர தினத்தன்றும் கருட சேவை சாதிக்கப்படுகிறது. பக்தர்களின் மனக்குறையுடன் வரும் பக்தர்கள் மட்டுமல்லாது, நீண்டநாள் மன நோயாளிகளும் பூரண நிவர்த்தி பெற இத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர். திருச்சி- சேலம் பாதையில் 24 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

கும்பகோணம்

கும்பகோணம் குமரன் தெருவிலுள்ள திருக்குடந்தை திருப்பதி என்கிற ஸ்ரீதேவி-பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோயில் 600 வருடங்கள் பழமையானது. இங்கு மூலவராக வெங்கடாஜலபதி அருள்கிறார். தனிச் சந்நதியில் பத்மாவதித் தாயார் பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் மகாவிஷ்ணுவின் தசாவதாரப் பெருமாள்களின் சந்நதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

துறையூர்

துறையூரை அடுத்த கொல்லிமலை-பச்சை மலைத் தொடரில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. இந்த மலைகோயில் ராஜராஜசோழன் பரம்பரையினரால் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறுகின்றனர். இங்கு பெருமாள் திருமண கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். அடிவாரத்திலிருந்து கோயிலுக்கு 1554 படிக்கட்டுகள் உள்ளன. வாகனங்கள் செல்லவும் 5 கி.மீ. தொலைவிற்கு மலைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை திருப்பதி பெருமாள் தனக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடன்களை இங்கேயே செலுத்தலாம் என்று பிரசன்னமாகி எழுந்தருளிச் சொன்னதாக தலவரலாறு கூறுகின்றது. இத்தலம் திருச்சி, துறையூருக்கு அருகேயுள்ளது.

சென்னை – சைதாப்பேட்டை

மேற்கு சைதாப்பேட்டையில் மிகப் பழமையான பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. தாயார் மற்றும் பெருமாளின் திருமேனி பூமியிலிருந்து கிடைத்ததாக கூறுகிறார்கள். மேலும், விஜய நகர மன்னர்களிடம் பணியாற்றிய தேசாய் எனும் பிரிவைச் சேர்ந்தவர்களால் கட்டப்பட்ட ஆலயம் இது. வருடந்தோரும் தமிழ் வருடப் பிறப்பு அன்று பிரம்மோத்சவ விழா தொடங்கி பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. பிரார்த்தனைகள் நிறைவேற பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தாயார் அலர்மேல்மங்கை எனும் திருப்பெயரிலேயே அருள்கிறார். செண்பக மரம் தலவிருட்சம்.

சின்ன திருப்பதி

தலத்தின் பெயரே சின்ன திருப்பதிதான். தர்மபுரி மாவட்டம் ஓசூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் பாகலூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. திருமலை திருப்பதியில் பெருமாள் மலை மீதும் தாயார் திருச்சானூர் தலத்திலும் அருள்பாலிக்கிறார்கள். ஆனால், இத்தலத்தில் மகாலட்சுமி, பத்மாவதி தாயார்களோடு சேர்ந்து பெருமாள் சேவை சாதிக்கிறார். கரம் உயர்த்தி அருள்பாலிக்கும் தோரணை பெருமாளுக்கு. வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

மதுரை

அப்பன் திருப்பதி கோயில் என்றே இக்கோயிலை அழைப்பர். மூலவர், நிவாசப் பெருமாள். தாயார், அலர்மேல் மங்கை. சித்திரை திருவிழாவின்போது அழகர்கோயிலிலிருந்து புறப்படும் கள்ளழகர் இத்தல மண்டபத்தில் ஓர் இரவு முழுவதும் தங்கிச் செல்லுவார். கருவறையில் ஸ்ரீநிவாசப் பெருமாள் தன் தேவியருடன் அருள்பாலிக்கிறார். மதுரையிலிருந்து அழகர்கோயிலுக்குச் செல்லும் வழியில் அப்பன் திருப்பதி தலம் அமைந்துள்ளது.

மோகனூர்

காவிரிக் கரையில் அமைந்துள்ள அழகிய தலம் இது. கருவறையில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். நவராத்திரியின்போது திருப்பதியில் ஒருநாள் எனும் உற்சவம் நடைபெறுகிறது. அன்று ஒருநாள் மட்டும் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு நடக்கும் அனைத்து பூஜைகளும் இங்கும் நடக்கும். அர்த்தநாரீஸ்வரர் போல கிருஷ்ணனும் ருக்மிணியும் இணைந்த அபூர்வ திருக்கோலத்தை இத்தலத்தில் தரிசிக்கலாம். இந்த அமைப்பை சம்மோஹன கிருஷ்ணன் என்பார்கள். மோகனூர் எனும் தலப்பெயர், இவரை வைத்துதான் வந்தது. புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் திருவோண நட்சத்திரத்தில் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். நாமக்கல்லில் இருந்து 18 கி.மீ. தொலைவில் மோகனூர் அமைந்துள்ளது.

சென்னை – தரமணி

ஏழுமலயான் கோயில் கொண்ட பல்வேறு தலங்களுள் ஒன்று சென்னை தரமணியில் உள்ளது. சென்னை-வேளச்சேரியிலிருந்து திருவான்மியூர் செல்லும் பாதையில் பாரதி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்தும், தரமணி பேருந்து நிலையத்திலிருந்தும் 2 கி.மீ தொலைவில், ராஜாஜி தெருவில் அமைந்துள்ளது இக்கோயில். ராகவபட்டாச்சாரியார் எனும் வைணவ பெரியவர் திருப்பதி திருமலையிலும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்திலும் பல வருடங்களாக கைங்கரியம் புரிந்து வந்தார். வயதான காலத்தில் அவரால் திருப்பதிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட, ஏழுமலையானைத் தனது இருப்பிடத்திற்கே அழைத்துவர தீர்மானித்தார். உண்மையான பக்தனின் அழைப்பை வேங்கடவன் மறுப்பானா? பெரியவரின் விருப்பப்படியே தரமணியில் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம், 1976ம் ஆண்டு உருவாகியது.

ஆப்பூர்

சிங்க பெருமாள் கோயிலிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் ஆப்பூர் தலத்தில் மலைமீது வெங்கடேசப் பெருமாளின் கோயில் அமைந்துள்ளது. இந்தப் பெருமாளுக்கு பிரார்த்தனையாக புடவை செலுத்தப்படுவது வித்தியாசமான வழக்கமாக இருக்கிறது. திருமணமாகாதவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டால் உடனே திருமணம் நடந்து விடுகிறது. பௌர்ணமியன்று பல சித்தர்கள் சூட்சுமமாக இந்தப் பெருமாளை வழிபடுவதாக கூறுகின்றனர்.

கிருஷ்ணாபுரம்

திருநெல்வேலிக்கு அருகேயுள்ள இத்தலம் உலகப் புகழ்பெற்ற சிற்பக் கலைக்கு பிரசித்தி பெற்றது. கலை நுணுக்கங்கள் வாய்ந்த உயிரோவியங்கள் நிறைந்த தலம். 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இக்கோயிலிலேயே நேர்த்திக் கடன் செலுத்தலாம். இங்குள்ள சில கற்சிலைகளை தட்டினால் வெண்கல ஓசை ஒலிக்கும். பெருமாள் நின்ற கோலத்தில் வெங்கடாஜலபதியாகக் காட்சியளிக்கிறார். பத்மாவதி தாயாரும் அருள் பொழிகிறார். நெல்லையிலிருந்து 11 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

பாதூர்

ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் வடபுறமாக பாதூர் கிராமத்தில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க வைணவ பஞ்ச (ஐந்து) கிருஷ்ணாரண்ய புண்ணிய பூமியில், புனிதம் நிறைந்த, மகோன்னதமான கருட நதி, சேஷ நதிகளின் தென்புறத்தில் அமைந்துள்ளது பாதூர். இந்த ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலையும், பாதூர் கிராமத்தையும் ராஷ்டிரகூட மாமன்னனான மூன்றாவது கிருஷ்ணனால் கி.பி. 964ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, சரபோஜிராவிற்கு தரிசனம் தந்த, தன்னை நாடி வந்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் இந்த பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கிழக்கு பார்த்த வண்ணம் அழகாய் காட்சி தருகிறார்.

தொகுப்பு: கண்ணன்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?