சத்தியமங்கலம் : பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லூர் ஊராட்சியில் நல்லூர், நேரு நகர், தாசம்பாளையம், பண்ணாடி புதூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களுக்கு பவானிசாகரில் இருந்து செயல்படுத்தப்படும் தொட்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீரின்றி தவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சத்தியமங்கலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் நல்லூர் பஸ் ஸ்டாப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி மற்றும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக சத்தியமங்கலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.