மும்பை : சேமிப்பு கணக்கு குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காவிட்டாலும் அபராதம் கிடையாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தொடர்ந்து, இந்தியன் வங்கியும் அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதனை பராமரிக்காவிட்டால், அதற்கு வங்கிகள் தனியாக அபராதம் விதித்து வருகின்றன. வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த நடவடிக்கை பெரும் சுமையாக உள்ளது.
இந்த நிலையில் பிரபல பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, இனி குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காவிட்டாலும் அபராதம் பிடித்தம் செய்யப்படாது என்று தெரிவித்தது. ஜூலை 1ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. பெண்கள் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில், இந்த மாற்றத்தை கொண்டு வந்து இருப்பதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. இதே போல அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு கட்டணத்திற்கான அபராதம் கட்டண விதிக்கும் முறை ரத்து செய்யப்படுகிறது என்று இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. வரும் ஜூலை 7ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது.