அமிர்தசரஸ்: பொதுமக்களிடம் பணம் பறித்த வழக்கில் பஞ்சாப்பில் ஆளுங்கட்சி எம்எல்ஏ கைது செய்யப்பட்டார். இவர் நகராட்சி அதிகாரியின் வாக்குமூலத்தால் சிக்கினார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகராட்சி அதிகாரியான உதவி நகர திட்டமிடல் அதிகாரி சுக்தேவ் வசிஷ்ட், கடந்த சில தினங்களுக்கு முன் போலி அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களிடமிருந்து பணம் பறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார். இவரிடம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தியதில், ஆம் ஆத்மி கட்சி ஜலந்தர் தொகுதி எம்எல்ஏ ராமன் அரோரா அளித்த அறிவுறுத்தலின்படி தான் பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக வாக்கு மூலம் அளித்தார்.
அதையடுத்து கடந்த ஒரு மாதமாக அரோராவின் தொலைபேசி பதிவுகள், நிதி ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் தகவல்களை ஆய்வு செய்த விஜிலென்ஸ் அதிகாரிகள், போதுமான ஆதாரங்களுடன் எம்எல்ஏ ராமன் அரோராவின் இல்லத்தில் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதால், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் ‘ஊழல் இல்லாத ஆட்சி’ என்ற வாக்குறுதிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் வெளியிட்ட பதிவில், ‘ஊழல் செய்பவர் யாராக இருந்தாலும், அவர்கள் எங்கள் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட, தண்டனையிலிருந்து தப்ப முடியாது’ என்று கடுமையாக எச்சரித்தார். மேலும் ஆம் ஆத்மி வெளியிட்ட பதிவில், ‘போலி அறிவிப்புகள் மூலம் மக்களிடம் பணம் பறித்தல் மற்றும் டிஜிட்டல் மோசடிகள் தொடர்பாக ராமன் அரோரா மீது விஜிலன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டது. கடந்த 2022ல் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்த பிறகு, ஆம் ஆத்மி கட்சியின் மூன்றாவது எம்எல்ஏ கைது செய்யப்பட்ட சம்பவத்தை கைது நாடகம் என்று எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் விமர்சித்துள்ளன.