அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்ட காவல் துறையில் பணியாற்றிய அமந்தீப் கவுரை, அம்மாநில மக்கள் ‘இன்ஸ்டா குயின்’ என்று அழைத்து வந்தனர். அவ்வப் போது சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இன்ஸ்டாகிராமில் 30,000-த்திற்கு மேற்பட்ட மக்கள் அவரை பின்தொடர்கின்றனர். அவரது சமூக வலைதள பதிவுகளில், போலீஸ் உடையில் ஆடம்பர பொருட்களுடன் இருக்கும் காணொளிகள், பஞ்சாப் காவல்துறையின் விதிமுறைகளை மீறியவையாக இருந்தன. இவர் மீதான விசாரணையில், அவரது வங்கிக் கணக்குகளில் 5,000 முதல் 3 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டன. இவை அவரது வருமானத்திற்கு மேல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று பஞ்சாப் மாநில விஜிலன்ஸ் பிரிவு, அவரது சொத்துக்கள் வருமானத்திற்கு அதிகமாக மீறி இருப்பதாகக் கூறி, மேலும் ஒரு வழக்கில் அவரை மீண்டும் கைது செய்தது. இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் தொடர்புடைய பல்விந்தர் சிங் என்ற நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,‘கடந்த ஏப். 2ம் தேதி தனது மகேந்திரா தார் எஸ்யூவி வாகனத்தில் 17.71 கிராம் ஹெராயின் வைத்திருந்ததாக அமந்தீப் கவுர் கைது செய்யப்பட்டார். ெதாடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது சொத்துக்களில் ஆடி கார், இரண்டு இன்னோவா கார்கள், ராயல் என்ஃபீல்டு பைக் மற்றும் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு ஆகியவை அடங்கும். இவையாவும் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்டவை என்ற சந்தேகத்தின் பேரில் அந்த சொத்துகள் யாவும் முடக்கப்பட்டுள்ளன’ என்று கூறினர்.