கம்பம்: அரசு விடுதி அறையை பூட்டி மாணவர்களை, காப்பாளர் சிறை வைத்த சம்பவம் கம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காப்பாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம், கம்பம் கோசந்திர ஓடை அருகே அரசு கள்ளர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு 10 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு காலை, மதியம், இரவு என 3 நேரம் உணவு வழங்கப்படுகிறது. கடந்த வாரம் 3ம் தேதி காப்பாளர் சத்தியேந்திரன், விடுதியில் உள்ள அனைத்து அறைகள் மற்றும் வெளிக்கதவை பூட்டி விட்டு சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவர்கள், பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சைல்டு லைன் இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், அரசு கள்ளர் மாணவர் விடுதியில் உள்ள மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘எங்களது விடுதியில் சமையலர், காவலாளி என யாரும் இல்லை. இதனால் காப்பாளர் தனது வீட்டில் 3 நேரத்திற்கான உணவுகளை தயார் செய்து விடுதிக்கு கொண்டு வருவார். கடந்த 3ம் தேதி கொண்டு வரப்பட்ட உணவை சாப்பிட்டு விட்டு பாக்கி உணவை 3 பேர் கொட்டினர். உணவை கொட்டியது யார் என காப்பாளர் கேட்டபோது யாரும் உண்மையை கூறவில்லை. இதையடுத்து அவர் எங்களுக்கு தண்ணீர் கூட தர முடியாது. தாகம் எடுத்தால் கழிவறையில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்து குடிக்குமாறு கூறினார். பின்னர் அனைத்து கதவுகளையும் பூட்டிவிட்டு சென்று விட்டார். இதனால் குடிக்க தண்ணீர் இல்லாமல் கழிவறையில் உள்ள குழாயில் தண்ணீரை பிடித்து குடித்தோம்’’ என்றனர். சைல்டுலைன் அதிகாரிகள், ‘‘ மாணவர்களிடம் நடத்திய விசாரணை யை அறிக்கையாக தயார் செய்து கலெக்டரிடம் வழங்க இருக்கிறோம்’’ என தெரிவித்தனர்.