டெல்லி: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையின் புல்வாமா பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தி்ல் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்த பயங்கர தாக்குதல் இந்தியாவை உலுக்கியது. இந்த தாக்குதலின் 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவுகூர்ந்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் நாம் இழந்த துணிச்சலான வீரர்களுக்கு மரியாதையையும் அஞ்சலியையும் செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்தையும் தேசத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் வருங்கால தலைமுறையினர் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.