திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் புல்லரம்பாக்கம் ஊராட்சியில் கடந்த 1971ம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் தமிழ் வழிக்கல்வி மற்றும் ஆங்கில வழிக்கல்வி 1 முதல் 8ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 139 பேரும் 6 அங்கன்வாடி மையங்களில் 150 பேரும் என மொத்தம் 289 பேர் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் 8ம் வகுப்புவரை படித்துவிட்டு 9, 10ம் வகுப்புகள் படிக்கவைக்க மாணவ, மாணவிகளை பூண்டி, சதுரங்கபேட்டை, திருவள்ளூர் போன்ற பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை நாடும்போது சேர்க்கை கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. மேலும் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் உயர்கல்வியை மேற்கொண்டு தொடர முடியாமல் பள்ளி படிப்பை பாதையில் நிறுத்தும் நிலையும் உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டி அனைத்து தடை இல்லா சான்றுகளும் பெற்று வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் வங்கியில் செலுத்தியுள்ளனர். ஆனால் இதனால் வரை பள்ளியில் தரம் உயர்த்தப்படவில்லை. எனவே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தருமாறு கிராம மக்கள் சார்பில் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ‘’கல்வி வளர்ச்சிக்காகவும் கல்வி மேம்பாட்டிற்காகவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் புல்லரம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.