பெரம்பூர்: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை மாநகர கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மாற்றப்பட்டு புதிய கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து குற்ற வழக்குகளில் ஈடுபடும் ரவுடிகள், சரித்திர பதிவேடு ரவுடிகள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
சென்னையிலேயே அதிக ரவுடிகள் உள்ள காவல் மாவட்டமான புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் தொடர்ந்து ரவுடிகளை கைது செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் மொத்தம் 720 சரித்திர பதிவேடு ரவுடிகள் உள்ளனர். இதில் 652 பேர் ஆக்டிவாக உள்ளனர். எனவே குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் பகுதி என்பதால் போலீசார் விழிப்புணர்வுடன் இருந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் மாற்றப்பட்டு புதிய துணை கமிஷனராக முத்துக்குமார் நியமிக்கப்பட்டார். இவர் தினமும் சரித்திர பதிவேடு ரவுடிகள், நீதிமன்றத்தில் ஆஜராகாத ரவுடிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொல்லை தருகின்ற ரவுடிகள் என பலரையும் கைது செய்து வருகின்றார்.
இதன்படி, வியாசர்பாடி சி.கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (எ) டைகர் அரவிந்தை (32) கைது செய்தனர். ஓட்டேரி டோபி கானா ஹவுஸிங் போர்டு பகுதியை சேர்ந்த ஹென்றிகுமார் (22), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சிவா (எ) கோண சிவா (22), சீனிவாசன் (24) ஆகிய 3 ரவுடிகளை கைது செய்தனர். வியாசர்பாடி உதயசூரியன் நகர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (எ)காட்டன் ராஜ் (27), புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த நாயகன் (30), புளியந்தோப்பு நரசிம்மன் நகர் பகுதியை சேர்ந்த கங்கா கணேஷ் (19), சந்தோஷ் (எ) துப்பாக்கி (21) ஆகியோரை கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்ட ரவுடி திருமலையின் மகன்தான் சந்தோஷ்.
புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பரமேஷ் (26), பாட்டில் மணி (எ) மணிகண்டன் (20), வியாசர்பாடி பகுதியை சேர்ந்த விஜயகுமார் (எ) வையாபுரி (34) கைது செய்தனர். இவ்வாறாக புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் ஒரே நாளில் 10 ரவுடிகளை போலீசார் கைது செய்து உள்ளனர்.