புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் புதுவை கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. காலை 9.05 மணிக்கு காந்தி சிலை அருகே முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி நடந்து சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, சுதந்திர தின பேரூரையாற்றினார். பின்னர், காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பதக்கம் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, அணிவகுப்புகளை பார்வையிட்டார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. அதன் பிறகு, தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது. இதேபோல், காரைக்காலில் நடந்த சுதந்திர தினவிழாவில் குடிமை பொருள் வழங்கல்துறை அமைச்சர் திருமுருகனும், மாகேவில் வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரும், ஏனாமில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனும் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.