Tuesday, March 5, 2024
Home » புதுவை ஆளுநர் தேனீர் விருந்து: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு: பாஜ கொடி கட்டாத அலுவலகமாக தமிழிசை மாற்றியதாக குற்றச்சாட்டு

புதுவை ஆளுநர் தேனீர் விருந்து: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு: பாஜ கொடி கட்டாத அலுவலகமாக தமிழிசை மாற்றியதாக குற்றச்சாட்டு

by MuthuKumar

புதுச்சேரி: குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேனீர் விருந்தை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் அறிவித்துள்ளன. குடியரசு தினவிழாவையொட்டி ஆளுநர் மாளிகையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆளுநர் தேனீர் விருந்து அளிப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான தேனீர் விருந்தில் கலந்துகொள்வதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளன.

இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அளிக்கும் குடியரசு தின தேனீர் விருந்தை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் அறிவித்துள்ளன. புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் (திமுக) சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற முறையில் மக்கள் பிரதிநிதிகளை ஆளுநர் அழைத்து தேனீர் விருந்து அளிப்பது என்பது மரபு. அதன்படி கடந்த காலங்களில் திமுக உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளோம்.

ஆனால் சமீபகாலமாக புதுச்சேரி ஆளுநர் மாளிகை என்பது பாஜ கொடி கட்டாத அலுவலகமாகவும், ஆளுநர் பாஜ தலைவர் போலும் செயல்படுகிறார். இச்செயல் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்று நாங்கள் தொடர்ந்து சுட்டிக் காட்டியும் அவர் தன் நிலையில் இருந்து மாறாமல் இருந்து வருகிறார்,’ என்று குற்றம் சாட்டியுள்ளார். இதே கருத்தை வலியுறுத்தி முந்தைய ஆளுங்கட்சியான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேனீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.

வடசென்னையில் போட்டியா? தமிழிசை பதில்
புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை நிருபர்களிடம் கூறுகையில்,‘புதுச்சேரியில் எந்தெந்த வளர்ச்சி திட்டங்களுக்கு திட்டமிட்டப்படுகிறதோ, அத்தனை திட்டங்களும் விரைவில் கொண்டு வரப்படும். அரசு பள்ளிகளில் மாலை நேர சிற்றுண்டியாக சிறுதானிய மிட்டாய், லட்டு உள்ளிட்டவை விரைவில் வழங்கப்பட இருக்கிறது. எதிர்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட அனைவரும் தேனீர் விருந்தை அரசியல் ஆக்க வேண்டாம். கவர்னர் தரும் விருந்தை, அரசியலாக பார்க்காமல் விருந்தாகத்தான் பார்க்க வேண்டும். எனவே, அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும், என்று அழைக்கிறேன்’ என்றார். தொடர்ந்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னையில் போட்டியிட உள்ளீர்களா என நிருபர்கள் கேட்டபோது, ‘தற்போது வரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யவில்லை. அத்தகைய முடிவு எடுக்கும்போது தெரிவிக்கிறேன்’ என்றார்.

You may also like

Leave a Comment

10 + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi