புதுச்சேரி: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் 34வது மலர், காய் மற்றும் கனி கண்காட்சி வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை 3 நாட்கள் தாவரவியல் பூங்காவில் நடக்க உள்ளது. இந்த கண்காட்சியில் மலர்கள், தொட்டியில் செடி வளர்ப்பு, மலர் அலங்காரம், காய்கறிகள், பழ வகைகள், மூலிகை செடிகள், பழத்தோட்டங்கள், அலங்கார தோட்டம், மாடித் தோட்டம், வீட்டு காய்கறித் தோட்டம் மற்றும் ரங்கோலி ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் பங்குபெறும் ரங்கோலி, வினாடி-வினா மற்றும் கட்டுரை போட்டிகள் நடக்க உள்ளது.
மேலும், இந்த கண்காட்சியில் சுமார் 40 ஆயிரம் பல்வேறு பூச்செடிகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இதற்காக புதுவை லாஸ்பேட்டையில் உள்ள வேளாண் பண்ணையில் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதனை வேளாண் துறை ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர். தற்போது இங்கு பூக்கள் பூத்து குலுங்குகிறது. இவைகள் அனைத்தும் வரும் 8ம் தேதி தாவரவியல் பூங்காவிற்கு கொண்டு சென்று கண்காட்சிக்கு தயார்படுத்தப்படுகிறது.