Saturday, April 13, 2024
Home » புதுவையில் பாஜ, அதிமுக உள்பட ஒரே நாளில் 8 பேர் மனுதாக்கல்

புதுவையில் பாஜ, அதிமுக உள்பட ஒரே நாளில் 8 பேர் மனுதாக்கல்

by Lakshmipathi

*ரங்கசாமி காலில் விழுந்து ஆசிபெற்று மனு தாக்கல் செய்த நமச்சிவாயம்

புதுச்சேரி : புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கு நேற்று ஒரேநாளில் 8 பேர் மனுதாக்கல் செய்தனர். கோரிமேடு அப்பா பைத்திய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு முதல்வர் ரங்கசாமியின் காலில் விழுந்து ஆசிபெற்ற பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் தனது மனுவை பேன்ட் வாத்தியம் முழங்க ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று தாக்கல் செய்தார்.
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குபதிவு ஏப்ரல் 19ம்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம்தேதி துவங்கிய நிலையில், ஒரேஒரு சுயேட்சை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யாமல் இருந்தனர். இந்த நிலையில் நேற்று அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தேஜ கூட்டணி கட்சிகள் சார்பில் களமிறங்கும் பாஜ வேட்பாளர் நமச்சிவாயம் நேற்று மதியம் 12 மணியளவில் மேளதாளம், செண்டமேளம், பேன்ட் வாத்தியம் முழங்க தொண்டர்களுடன் வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகம் வந்தார். முதல்வர் ரங்கசாமி, பாஜக மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில பாஜக தலைவர் செல்வகணபதி, அதிமுக ஓம்சக்தி சேகர் மற்றும் முக்கியஸ்தர்கள் தயாராக அங்கு நின்றிருந்த நிலையில் நல்லநேரம் பார்த்து சரியாக மதியம் 12.09 மணிக்கு வேட்பு மனுவை, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான குலோத்துங்கனிடம் நமச்சிவாயம் தாக்கல் செய்தார். அப்போது வழுதாவூர் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக அவரது மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டிய சில ஆவணங்களை அங்கு கொண்டு வர தாமதமாகவே முதல்வரும், வேட்பாளரும் சிறிதுநேரம் டென்ஷனாகி பரபரப்புடன் காணப்பட்டனர்.

முன்னதாக தனது வேட்புமனுவை கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி, கோரிமேடு அப்பா பைத்திய சுவாமி, கதிர்காமம் கதிர்வேல் சுவாமி உள்ளிட்ட கோயில்களுக்கு வாகன ஊர்வலமாக சென்று வேட்புமனுவை வைத்து வழிபாடு செய்தார். முன்னதாக அங்கு தனது மாமனாரும், முதல்வருமான ரங்கசாமியின் காலில் விழுந்து நமச்சிவாயம் ஆசிபெற்றார்.

இதுதவிர அதிமுக வேட்பாளரான தமிழ்வேந்தன், உப்பளத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட தேர்தல் அலுவலகம் சென்றனர். அவர்களை 100 மீட்டருக்கு முன்னதாக பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் தடுத்தனர். அதைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சென்று மனுதாக்கல் செய்தார். அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் வேட்பாளர் தமிழ்வேந்தன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ ஓமலிங்கம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் மேனகா, சுசி கம்யூனிஸ்ட் சங்கரன் உள்ளிட்டோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். மேலும் பாஜக மாற்று வேட்பாளராக நமச்சிவாயத்தின் மனைவி வசந்தி உள்ளிட்ட 8 பேர் நேற்று ஒரே நாளில் மனுதாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் காரணமாக புதுச்சேரி மாவட்ட தேர்தல் அலுவலகம் அமைந்துள்ள வழுதாவூர் சாலையில் சீனியர் எஸ்பி நாரா.சைதன்யா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துப்பாக்கி ஏந்தியபடி துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கி திரும்பிய ஆம்புலன்ஸ்

வேட்பு மனுதாக்கல் செய்ய வந்த அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அனைத்து வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் ஊர்வலமாக மாவட்ட தேர்தல் அலுவலகம் வந்ததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழுதாவூர் சாலை, கோரிமேடு சாலை, லாஸ்பேட்டை இசிஆர், எல்லைபிள்ளைச்சாவடி, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. அப்போது கதிர்காமம் மருத்துவமனைக்கு வேகமாக வந்த ஆம்புலன்சுக்கு வழிகிடைக்காமல் சிக்கித் தவித்த நிலையில், தாறுமாறாக வாகனங்கள் நடுரோட்டில் நிறுத்தப்பட்டு இருக்கவே, வந்த வழியிலேயே திரும்பிச் செல்லும் அவலம் ஏற்பட்டது.

வழிநெடுகிலும் நின்ற போலீசார் அவற்றை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாலும் நேற்று காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும் இப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. பாஜக வேட்பாளருடன் கூடுதல் நபர்கள் சென்றதாககூறி அதிமுக சார்பிலும் கூடுதலாக நபர்கள் வேட்பாளருடன் தேர்தல் அலுவலகம் உள்ளே செல்ல முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுத்த நிலையில் போலீஸ் அதிகாரிகளுடன் மாநில செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் சுயேட்சை வேட்பாளராக மனுதாக்கல் செய்ய வந்தவர்கள் தங்களுடன் அழைத்து வந்தவர்கள் திடீரென மாயமாகவே, மாற்று நபர்களை உடன் அழைத்துச் செல்வதற்காக அங்கும் இங்குமாக ஓடி அலைந்ததையும் காணமுடிந்தது.

You may also like

Leave a Comment

15 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi