மேட்டுப்பாளையம்,: உலக புகழ்பெற்ற மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலுக்கு கடந்த 2005ம் ஆண்டு யுனெஸ்கோ அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த அந்தஸ்து பெற்று தற்போது 18 ஆண்டுகள் நிறைவு பெற்று 19ம் ஆண்டில் நீலகிரி மலை ரயில் காலடி எடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நேற்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
மேலும், சென்னை பெரம்பூர் இணைப்புப்பெட்டி தொழிற்சாலையில் அதிநவீன வசதி பெட்டிகளுடன் தயாரிக்கப்பட்ட மலை ரயில் மற்றும் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன பயணச்சீட்டு மைய கட்டிடத்தையும் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் நேற்று துவக்கி வைத்தார். புதுபொலிவுடன் இயக்கப்பட்ட மலை ரயிலில் 184 பயணிகள் பயணம் செய்து மகிழ்ச்சியடைந்தனர். அவர்களுக்கு இனிப்பு மற்றும் அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்பட்டது.