புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மனநல சிகிச்சையில் குணமடைந்த மகாராஷ்டிரா பெண்ணை சமூக வலைத்தள பதிவின் உதவியுடன் அவரது குடும்பத்துடன் சேர்த்து வைத்த மருத்துவ மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மகாராஷ்டிராவை சேர்ந்த சல்மா ஜவர்கான் என்பவர் கடந்த 2.5 ஆண்டுகளுக்கு முன்பு தவறுதலாக மாற்று ரயிலில் ஏறி தமிழ்நாடு வந்து சேர்ந்தார். புதுக்கோட்டையில் தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் மனிதாபமற்ற முறையில் அடைத்து வைத்த பெண்களை அரசு மீட்டபோது சல்மாவும் அதில் இருந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட மனநல சிகிச்சையில் அவர் குணமும் அடைந்தார்.
ராஜஸ்தானை சேர்ந்த மருத்துவ மாணவி பிரமிளா என்பவர் இந்தி மட்டுமே தெரிந்த சல்மாவிடம் பேசி அவரை பற்றிய தகவல்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். பிரமிளாவின் நண்பர்கள் அந்த பதிவை மகாராஷ்டிராவில் வைரலாக்கிய நிலையில் இறந்து விட்டார் என கருதப்பட்ட சல்மா உயிருடன் இருப்பதை அறிந்த குடும்பத்தினர் நேரில் வந்து அவரை அழைத்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சல்மாவை தங்களுக்கு கண்டுபிடித்து கொடுத்த மருத்துவ மாணவிக்கு சல்மாவின் கணவர் மற்றும் 2 மகன்கள் நன்றி தெரிவித்தனர். பல்வேறு தரப்பினரும் மாணவி பிரமிளாவை பாராட்டி வரும் நிலையில் புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா நேரில் சென்று சால்வை அணிவித்து புத்தகமும், கேடயமும் வழங்கி பாராட்டினார்.