* பழங்கள் வீணாவதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் பலாப் பழம் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பலா, மா, வாழை ஆகிய முக்கனிகளும் அதிக சுவையுடன் உள்ளதால், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. அதில், பலா இரண்டு சீசன்களிலும், மா கோடை சீசனில் மட்டும் காய்க்கும்.
மே முதல் துவங்கும் பலா, மா சீசன் மக்களை சுண்டி இழுக்கும் மணமும், சுவையும் கொண்டவை. இரண்டிலும் நார்ச்சத்தும், வைட்டமின் சத்துக்களும் உள்ளதால் கோடையில் அனைவரும் ‘ருசிக்க’ வேண்டும் என மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர்.
தமிழகத்தில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலா அதிகளவில் நட்டு பராமரிக்கின்றனர். அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவில.
வடகாடு, கீரமங்கலம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பல பகுதியில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பலா மரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், காய்க்கும் பலா பலாப் பழங்கள் அறுவடை ெசய்து அருகிலுள்ள மண்டிகளில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிங்களுக்கும் அனுப்புகின்றனர். அதில், வடகாடு பகுதி பலாப்பழம் ருசியாக இருப்பதால் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கும். இதற்கான, தனித்தன்மையை உலகெங்கும் பரவலாக்கும் விதமாகவும், விற்பனையை அதிகரிக்கும் விதமாகவும் வடகாடு பகுதி பலாப் பழத்துக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சியில் விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விலை வீழ்ச்சி: இந்நிலையில், மண்டிகளில் தற்போது பலாப் பழங்களின் மண்டிகளில் குவிக்கப்படுவதால், விவசாயிகளும், வியாபாரிகளும் லோடு ஆட்டோக்கள் மூலம் மக்கள் கூடும் இடங்கள், முக்கிய சாலைகள், சந்தைகளில் கூவி கூவி விற்கின்றனர்.
கடந்தாண்டு சிறிய பழங்கள் கூட ரூ.250க்கு விற்றன. ஆனால், தற்போது, ரூ.50, ரூ.100க்கு கூவி கூவி விற்றால் கூட வாங்க ஆட்களில்லை. இதனால், விலை கடுமையாக சரிவடைந்தும், உரிய நேரத்தில் விற்கமுடியாமல் விவசாயிகளை பாதித்துள்ளது.
சீசன்களில் உற்பத்தியாகும் பழங்களை மதிப்புக் கூட்டி விற்க ஏதுவாக குளிரூட்டப்பட்ட கிடங்குகள், மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: ஒரு கிலோ பலாப்பழம் ரூ.36-க்கு விற்பனை ஆகிய நிலையில், தற்போது ரூ.5 க்கும் குறைவாகவே விற்பனை ஆகிறது. சில மண்டிகளில் வேண்டா வெறுப்பாக பலாப்பழங்களை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
சிறிய அளவிலான பழங்கள் வாங்க மறுக்கின்றனர். தோப்புகளிலும், கடைகளிலும் அழுகிய பழங்கள் அதிகம் உள்ளன. இவ்வாறு உள்ளூரில் விளைவிக்கப்படும் பலாப்பழத்துக்கு உரிய விலை கிடைக்காதது விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
அதேபோல, வெளிப்படைத் தன்மையோடு வணிகம் நடைபெற வேண்டும். பலாப்பழத்தில் இருந்து மதிப்புக் கூட்டு பொருட்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளை இப்பகுதியில் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்தக் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றனர்.