புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரோடுரோலர் மீது கார் மோதியதில் புதுச்சேரி அமைச்சர் தேனி ஜெயக்குமார் உள்பட 5 பேர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் நேற்று நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்க புதுச்சேரி வேளாண்மை துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார், அவரது உதவியாளர் பிரகாஷ், அமைச்சருக்கு பாதுகாப்பாக வந்த புதுச்சேரி காவலர் தயாநிதி ஆகியோர் காரில் சென்றனர். காரை சிலம்பரசன் என்பவர் ஓட்டினார். அவர்கள் புதுக்கோட்டை சென்றுவிட்டு, அங்கிருந்து அறந்தாங்கி மூக்குடி கிராமத்தை சேர்ந்த சுகுமார் என்பவர் ஆலங்குடி வழியாக பேராவூரணிக்கு காதணி விழாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
கார் புதுக்கோட்டை மாவட்டம், மாங்காடு அடுத்த பூச்சிக்கடை அருகே சென்றபோது சைக்கிளில் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் சிலம்பரசன் காரை திருப்பினார். அப்போது சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த ரோடு ரோலரின் கல்சக்கரத்தில் கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில், காரில் இருந்த புதுச்சேரி அமைச்சர் தேனி ஜெயக்குமார் உட்பட 5 பேரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பினர்.
அப்பகுதியினர் ஓடிவந்து அமைச்சர் தேனி ஜெயக்குமார் உள்பட 5 பேரையும் மீட்டு புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.