Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதுகையில் போலி ஆவணம் மூலம் 140 ஏக்கர் அரசு நிலம் முறைகேடாக பதிவு: ஆதாரத்துடன் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்ற மக்கள்

திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே புதுநிலைவயல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 140 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அப்பகுதி மக்கள் மஞ்சுவிரட்டு திடலாக பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே சம்பந்தப்பட்ட இடத்தை தனிநபர் ஒருவர் பல ஆண்டுகளாக கிரயம் செய்ய முயற்சி செய்து வருகிறார். இந்த பிரச்னைக்குரிய இடத்தை தனிநபர் இதற்கு முன் பலமுறை கிரயம் செய்தும், பின்னர் பத்திரம் ரத்து செய்து இருப்பதும் ஆவணத்தில் தெரியவந்துள்ளது. இதனிடையே கடந்த மார்ச் மாதம் மீண்டும் பிரச்னைக்குரிய அரசு இடம் 140 ஏக்கர் புதுநிலைவயல் ஊராட்சிக்கு சம்பந்தமில்லாத தனி நபர் ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளதாக எழுந்துள்ள புகார் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதனை அறிந்த புதுநிலைவயல் கிராமத்தை சேர்ந்த சிலர், கே.புதுப்பட்டியில் உள்ள கீழநிலை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு ஆவணங்களுடன் நேற்று சென்று, அரசு நிலம் எதன் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இதையடுத்து அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்ததில் அரசு நிலம் உரிய ஆவணம் இன்றி பத்திரப்பதிவு செய்துள்ளதாக முதல் கட்ட ஆய்வில் தெரியவந்தது. இதனால் முறைகேடான ஆவணங்கள் மூலம் தனிநபருக்கு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.