புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து பேசியதாவது: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு ஒன்றிய அரசை வலியுறுத்தி கொண்டே உள்ளோம். பலமுறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். கடந்த முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியபோது, ஒன்றிய அரசு மாநில அந்தஸ்து தர வாய்ப்பில்லை என்று அறிவித்துவிட்டது.
எம்எல்ஏக்கள் தெரிவிக்கும் குறைகளையும், கேட்கும் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற மாநில அந்தஸ்து மிகவும் அவசியம். இங்கும் ஆளும் நிலையில் இருந்தால்தான் மக்களுக்கு தேவையானதை நிறைவேற்ற என்ன அதிகாரம் உள்ளது என்பது தெரியவரும்.
எப்படி இருந்தாலும் கவர்னரின் ஒப்புதல் மிகவும் அவசியமான ஒன்று.கவர்னர் மட்டுமல்ல கோப்புகளை பார்க்கும் எல்டிசிக்கள் முதல் தலைமை செயலர் வரை அவர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதுதான் நிறைவேற வேண்டும் என்று நினைக்கின்றனர். அதனால் கோப்புகள் தேங்கி கிடக்கும் நிலை உள்ளது. மக்கள் எண்ணங்கள் எவ்வாறு நிறைவேறும்? எப்படி விரைவாக திட்டங்களை நிறைவேற்ற முடியும்? இவைகளை சுட்டி காட்டி ஒன்றிய அரசிடம் மாநில அந்தஸ்து கேட்டு வலியுறுத்துகிறோம். இந்தியா கூட்டணிக்கு அதிக எம்பிக்கள் கிடைத்துள்ளனர். அவர்களும் நாடாளுமன்றத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.