புதுடெல்லி: கிறிஸ்தவராக மதம் மாறிய பின்னர் வேலைக்காக இந்து என்று தெரிவித்து எஸ்.சி சான்றிதழ் கோரிய பெண்ணுக்கு சான்றிதழ் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. புதுச்சேரி அரசுப் பணியில் மேல் பிரிவு எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்த செல்வராணி என்பவர் தனது தந்தை இந்து என்றும், தாய் கிறித்தவர் என்பதால் தான் ஒரு இந்து என்று கூறி தனக்கு எஸ்.சி. சான்றுதழ் கோரி விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் கிராம நிர்வாக அதிகாரி மேற்கொண்ட விசாரணையில் அவரது தந்தை உட்பட அனைவரும் கிறித்தவ மதத்துக்கு மாறியது தெரிய வந்தது. இதனையடுத்து செல்வராணிக்கு எஸ்.சி சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர் மறுத்துள்ளார். இதனையடுத்து செல்வராணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தான் சிறு வயது முதல் இந்து மதத்தை பின்பற்றுவதாகவும், வளுவன் சமூகத்தை சேர்ந்தவர் என்றும், ஏற்கனவே கிறித்தவ மதத்துக்கு மாறினாலும் பின்னர் தான் சார்ந்த இந்து மதத்துக்கு திரும்பி விட்டதாக தெரிவித்திருந்தார். அதேபோல தனது தந்தை, சகோதரர் ஆகியோர் எஸ்.சி சான்றிதழ் வைத்துள்ளனர் என்றும், தனக்கும் எஸ்.சி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘செல்வராணியை பொருத்தவரை அவர் சிறு வயது முதல் கிறித்தவ மதத்தில் பற்றுள்ளவராக இருந்துள்ளார்; தேவாலய பிரார்த்தனைகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று கிறித்தவ சமயத்தை பின்பற்றியுள்ளார் என்பது அரசு தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
எனவே சலுகையை பெறுவதற்கான எஸ்.சி சான்றிதழ் கோரியது ஏற்க முடியாது. மேலும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்புவதையும், அவர்களின் அசல் சாதியினரால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான ஆதாரங்கள் இல்லை எனறால், எஸ்.சி. சமூக பலன்களை வழங்க முடியாது. அந்த வகையில் மனுதாரரான செல்வராணி மற்றும் குடும்பத்தினர் இந்து மதத்துக்கு மறுமதமாற்றமானது தொடர்பான உரிய ஆதாரத்தை வழங்கத் தவறிவிட்டார்.
எனவே அவருக்கு எஸ்.சி சாதி சான்றிதழ் வழங்க முடியாது’ என தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து செல்வராணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பங்கஜ் மிட்டல், ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தான் சார்ந்த மதத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், இடஒதுக்கீடு பலன்களைப் பெறுவதற்காக மதம் மாறுவது என்பது இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படை சமூக நோக்கங்களை சிதைக்கிறது என்றும் சலுகைகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மதம் மாறுவது என்பது அரசியல்சாசனத்தின் மீதான மோசடி எனவும் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின் அடிப்படை நெறிமுறைகளுக்கு முரணானது என்றும் தெரிவித்தனர்.
மனுதாரர் கிறிஸ்தவராக மாற ஞானஸ்நானம் பெற்ற பின்னரும் தன்னை ஒரு இந்துவாக அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது, அவரது இரட்டைக் கூற்று ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்த நீதிபதிகள், எஸ்.சி சான்றிதழ் வழங்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானதே எனக்கூறி செல்வராணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.