புதுச்சேரி: புதுச்சேரியில் விடுதியில் திண்டுக்கலை சேர்ந்த நகை ஆசாரி தனது மனைவி, மகன், மகளுடன் நகை ஆசாரி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (52). இவர் நகை பத்தர் தொழில் செய்து வந்தார். இவருக்கு சரஸ்வதி (48) என்ற மனைவியும், சுதர்சன் (25) என்ற மகனும், சவுமியா (22) என்ற மகளும் இருந்து வந்தனர். கடந்த 7ம் தேதி சந்திரசேகர் தனது குடும்பத்துடன் புதுச்சேரியை சுற்றி பார்க்க வந்துள்ளார்.
இதையடுத்து புதுவை முத்துமாரியம்மன் கோயில் வீதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று முன்தினம் மதியம் சந்திரசேகர் அறையை காலி செய்து விட்டு புறப்படுவதாக இருந்தது. ஆனால் சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்து அசதியாக உள்ளதால் நாளை (நேற்று) காலை அறையை காலி செய்வதாக விடுதி நிர்வாகத்திடம் கூறி கூடுதாக பணம் செலுத்திவிட்டு அறையில் குடும்பத்துடன் சந்திரசேகர் தங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை வெகு நேரம் ஆகியும் அறையில் இருந்து சந்திரசேகர் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் பெரியகடை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் அந்த அறையின் மாற்று சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சந்திரசேகர் தனது குடும்பத்துடன் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அறையில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதன் அடிப்படையில் நடந்த முதற்கட்ட விசாரணையில், ‘நகையை உருக்கி தொழில் செய்வதில் நஷ்டம் ஏற்பட்டு கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் கொடுத்தவர்கள் கொடுத்த பணத்தையும் நகையையும் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சல் அடைந்த சந்திரசேகர் தனது குடும்பத்துடன் புதுச்சேரிக்கு வந்து மகிழ்ச்சியாக சுற்றிப்பார்த்துவிட்டு பிறகு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம்’ என்று கூறப்படுகிறது.
ஆனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான எந்தவித தடயமும் இல்லை. அவர்கள் உடலிலும் எந்த காயமும் இல்லை. இதனால் அவர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 4 பேர் இறப்பு குறித்து திண்டுக்கல்லில் உள்ள அவரது உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 4 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இன்று அவர்களின் உடல்களை பிரேதபரிசோதனை செய்யப்படுகிறது. இதன்பிறகே அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது குறித்து தெரியவரும்.